கலைஞர் தன் குடும்பத்தொழில் ஆசியாவிலேயே பெரிய தொழிலாக வளர போட்ட விதை தான் இன்று அவர்களுக்கே தெரியாமல் வளர்ந்து நிற்கிறது.
சினிமா என்பதை தியேட்டரில் மட்டுமே பார்த்து வியந்து கொண்டிருந்தது தமிழ்நாடு. அந்த சினிமாவை ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் கொண்டு வந்தது டிவிக்கள். முக்கியமாக கலைஞர் கொண்டு வந்த இலவச கலைஞர் டிவி திட்டம்.
இன்று விஜய்யை பெண்களெல்லாம் முக்கியமாக கிராமப்புறப்பெண்களெல்லாம் பார்த்து உணர்ச்சிவசப்படுகிற அளவுக்கு இருக்கிறதென்றால் நிச்சயம் டிவிக்களுக்கு ஒரு பங்கு உண்டு. இன்று ஸ்மார்ட் டிவிக்கள் வந்தாலும் டிவி பார்க்கும் வழக்கத்தை பழக்கி விட்டது கலைஞர் டிவி தான். அதோடு சுமங்கலி கேபிள் விஷன் செய்தது சன் டிவி, கே டிவிக்களை ப்ரைம் சேனல்களில் வைத்தது.
இன்றைய சூழல்களில் பெண்கள் தியேட்டர் பக்கம் வருவதில்லை. ஆனால் விஜய் என்கிற நடிகன் மீது பாமரப்பெண்கள் அளவு கடந்த பாசமும், அன்பும் வைக்கக்காரணம் விஜய்யின் ஆரம்பக்கால திரைப்படங்களை திரும்ப திரும்ப ஒளிபரப்பியதைக்கண்டதால்.
மற்றபடி அரசியல் அறிவுடனோ, விஜய் முதல்வராக வந்தால் நாடு முன்னேறும் என்றெல்லாம் நினைத்து ஓட்டளிக்கவில்லை. திமுக, அதிமுகவின் சுயநலம் அரசியலில் அப்பட்டமாக பயமின்றி செய்வது வெளியே தெரிந்ததால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பே காரணம்.
பொதுவெளியில் சீமான் போன்றோர் கரடியாக தமிழர் நலன் பற்றி கரடியாக கத்திக்கொண்டிருக்கும் போது வீட்டுக்குள் ஒளிப்பரப்படும் பூவே உனக்காக, ப்ரியமானவளே, அழகிய தமிழ்மகன் போன்ற படங்கள் ஒரு மாற்றத்தை பெண்கள் மனதில் ஏற்றிக்கொண்டிருந்திருக்கின்றன.
பெண்களின் இந்த வாக்கு மாற்றத்தோடு விஜய்யின் அரசியல் பரப்புரைக்கு திமுக அரசு செய்த கெடுபிடிகள் பெண்களை விஜய்யிடம் கொண்டு போய் சேர்த்தன.
விஜய்காந்த், கமல்ஹாசன், ரஜினி படங்களும் தான் ஒளிபரப்பாகின. ஆனால் விஜய்யை மட்டும் நேசிக்க என்ன காரணம்?. விஜய்யின் இளவயதும், பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றமும். நம்மில் ஒருவனைப்போல் இருக்கும் ஒருவன் சாகசங்கள் செய்யும் போது நமக்கு அது உடனே பிடித்துப்போகிறது.
சொல்ல வருவது என்னவென்றால் கணவனே சொன்னாலும் மனைவி கேட்காமல் விஜய்க்கு ஓட்டு போடும் அளவுக்கு செல்வதன் காரணமே நம் வீட்டு வரவேற்பறைக்குள் வந்ததால் தான். ஆனந்த் முதல் ஆதவ் வரையுள்ள தவெகவினரின் பாடி லேங்வேஜ் பார்த்தால் ஏதோ இவர்களின் அரசியல் பணியைப்பார்த்து ஓட்டளித்ததைப்போல் தோன்றும். ஆனால் விழுந்தது என்னவோ மெர்சல் வெற்றிமாறனுக்கு, பிகில் மைக்கேல் ராயப்பனுக்கு, துப்பாக்கி ஜகதீஷுக்கு.
மற்ற கட்சிக்காரர்கள் வீட்டுக்கு வெளியே கொடியோடு நின்றாலும், அதன் தலைவர்கள் வீட்டுக்குள்ளே நியூஸ் செனலில் ஒரு சில செகண்டுகளில் மறைந்து போகிறார்கள். ஆனால் விஜய்யின் ஏதோ ஒரு பாட்டு அல்லது ஒரு சினிமா ஏதாவது ஒரு சேனலில் வந்து கொண்டு தான் இருக்கிறது.
அது தான் வெற்றிக்கான மூலம். தவேக நிச்சயம் கலைஞருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
"எங்கள் தலைவர் தந்த கலைஞர் டிவி இன்னும் ரிப்பேராகாமல் ஓடிக்கொண்டிருக்கிறது" என திமுகவினர் பெருமைப்படுவார்கள். அது செய்த வினையறியாமலேயே.
Selvan Anbu


