அதற்காக நாயகி தேடி பெங்களூர் வந்த போது 'மகாகவி காளிதாஸா' என்கிற கன்னடப்படம் ஓடிக்கொண்டிருக்க அதைப்பார்க்க சென்றவருக்கு அந்தப்படத்தில் நடித்திருந்த நாயகியை பிடித்துப்போயிற்று. உடனே பேசி சென்னைக்கு கொண்டு வந்தார். சென்னைக்கு வந்த அந்தப்பெண் இயக்குனரின் மகளான பத்மாவுக்கு நெருக்கமான தோழியானார் அவர் தான் சரோஜா தேவி.
பைரப்பா என்கிற போலீஸ்காரருக்கும், ருத்ரம்மா என்கிற அவர் மனைவிக்கும் மூன்று பெண் குழந்தைகள். நான்காவதாக ஒரு ஆண் குழந்தைக்கு அவர்கள் வேண்டாத தெய்வமில்லை. ஆனால் நான்காவதும் பெண் குழந்தை. நான்காவதும் பெண் குழந்தை என்பதால் வேண்டாவெறுப்பாக வளர்க்கப்பட்டாள் அக்குழந்தை. இடையில் முடக்குவாதம் வேறு. திரும்பவும் கடவுளை வேண்டி, வேண்டி அக்குழந்தை நடக்கத்தொடங்கியது.
சரோஜா என்கிற அக்குழந்தை நன்றாக ஹிந்திப்பாடல்கள் பாடுவதை கண்ட தந்தை அவரை காவல் துறை விழாவில் பாட வைக்க அது பள்ளிப்பாட்டு போட்டி வரை சென்றது. பள்ளிகளுக்கான போட்டியில் பெங்களூரு செயிண்ட் தெரசா பள்ளி மாணவி சரோஜாவின் குரல் நடுவராக வந்திருந்த நடிகர், இயக்குனர் ஹொன்னப்ப பாகவதருக்குப்பிடித்துப்போனது. பாட வைக்க குரல் டெஸ்ட்டோடு, மேக்கப் டெஸ்ட்டும் எடுத்தார். பாடுவதை விட நடிப்பு சிறப்பாக இருந்தது. அப்படி பாகவதரின் 'மகாகவி காளிதாஸ்' படத்தில் சிறிய வேடம் கொடுத்தார். அடுத்து இரண்டு படங்களில் சிறிய வேடத்தில் நடித்தார் சரோஜா தேவி.
சுப்ரமண்யம் மூலம் சென்னை வந்த சரோஜாதேவியை அழைத்துக்கொண்டு மகள் பத்மா எழுத்தாளர் சின்ன அண்ணாமலையை சந்தித்தார். சின்ன அண்ணாமலை அப்போது 'தங்கமலை ரகசியம்' படத்தின் கதையை எழுதி படமாகிக்கொண்டிருந்தது. பத்மா சரோஜாவை அறிமுகப்படுத்தி தந்தையின் படத்தில் நடிக்க வந்திருப்பதை சொல்லி தமிழில் வாய்ப்புக்கு கேட்க சின்ன அண்ணாமலைக்கு அந்தப்பெண்ணை பிடித்திருந்தது. அவர் சிபாரிசில் 'தங்கமலை ரகசியம்' படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வாய்ப்பு கிடைத்தது. 250ரூபாய் சம்பளம். பின் சில படங்களில் நடன வாய்ப்புகள் வந்தன.
சின்ன அண்ணாமலை எம்.ஜி.ஆரிடம் தான் தயாரிப்பாளராக ஆக வாய்ப்பு கேட்டார். ஆனால் எம்ஜிஆரை சம்மதிக்க வைக்க அவர் "நீங்கள் சமூகப்படத்தில் நடிக்க வேண்டும். எத்தனை நாள் தான் வாள் சண்டை போட்டுக்கொண்டு இருப்பது?" எனப்போட்டு வைக்க அவரும் சிரித்துக்கொண்டே சம்மதிக்க 'சாவித்திரி பிக்சர்ஸ்' கம்பெனி உருவானது.
கதைக்கு ஹிந்தியில் தேவ்ஆனந்த் நடித்த 'பாக்கெட் மார்' படத்தின் கதை ரைட்ஸ் வாங்கப்பட்டது. படத்தின் தலைப்பு நல்ல அறிவுரையாக வைக்க வேண்டும். யார் சொல்கிறார்களோ அவர்களுக்கு 500ரூபாய் பரிசினை எம்.ஜி.ஆர் அறிவிக்க மா.லெட்சுமணன் 'திருடாதே' எனச்சொல்லி 500 ரூபாய் பரிசை வென்றார்.
நாயகியாக புதுமுகத்தைப்போடலாம் என எம்.ஜி.ஆர் சொல்ல சின்ன அண்ணாமலைக்கு சந்தோஷம். ஏனென்றால் 'தங்கமலை ரகசியம்' படத்தில் சரோஜாதேவிக்கு மேக்கப் இட்ட மேக்கப்மேன் 'நல்ல முகவெட்டு இருக்கிறது. புக் செய்து வையுங்கள்' எனச்சொல்ல மூன்று படத்துக்கு தலா 3000, 7500, 10000 என சின்ன அண்ணாமலையே புக் செய்து வைத்திருந்தார். சரோஜாவைப்பற்றி சின்ன அண்ணாமலை புதுமுகத்துக்காக சொல்ல அவரை எம்.ஜி.ஆர் வரச்சொன்னார். மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டு பலரும் சரோஜாதேவியை கருப்பாக இருக்கிறார், உயரமில்லை என தட்டிக்கழிக்க எம்.ஜி.ஆர் சரோஜாவை நாயகியாக்கத் தீர்மானித்தார்.
"காலை தாங்கி தாங்கி நடக்கிறது இந்தப்பெண்" என ஒருவர் குறை சொல்ல "அதுவும் செக்ஸியாக தானே இருக்கிறது" எனச்சொல்லி 'திருடாதே' நாயகியாக்கியதோடு தன் நாடோடி மன்னன் படத்துக்கும் ஒரு பாடலுக்காக சின்ன அண்ணாமலையின் கால்ஷீட்டை வாங்கினார் எம்.ஜி.ஆர்.
நாடோடி மன்னன் படத்தில் சரோஜா தேவியின் பாடல் எடுத்து முடிந்திருக்க பானுமதி-எம்.ஜி.ஆர் இடையே லடாய் உருவானது. பானுமதி குட்பை சொல்லிவிட்டு 'நாடோடி மன்னன்' படத்திலிருந்து வெளியேற எம்.ஜி.ஆர் சரோஜா தேவியின் எடுத்தப்பாடலை தூக்கி வீசிவிட்டு புதிய நாயகியாக்கி கதையை மாற்றி ஷூட்டிங்கைத்தொடங்கினார்.
இடையில் திருடாதே படத்தின் போது ஏற்பட்ட விபத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் ஷூட்டிங் நின்று போக சின்ன அண்ணாமலை வாங்கிய கடனின் வட்டிக்காக படத்தை ஏ.எல்.சினிவாசனிடம் எம்.ஜி.ஆரே விற்றுக்கொடுத்தார். அதில் சின்ன அண்ணாமலைக்கு நல்ல தொகை கிடைத்தது. அதில் வேறு படமே எடுத்தார் அவர்.
நாடோடி மன்னன் பெருவெற்றி பெற சரோஜா தேவி முன்னணி நடிகையானார். ஆனால் அதற்கு முன்பே தேவர் எடுத்த 'செங்கோட்டை சிங்கம்' சரோஜா தேவியை தமிழகத்தில் அறிய வைத்தது.
இரண்டு வருடங்களுக்குப்பிறகு 'திருடாதே' வெளியானது. நூறு நாள் ஓடி வெற்றி விழா கொண்டாடப்பட்டது. தொடங்கிய சின்ன அண்ணாமலை இப்போது வெளியில்.
ஆனால் நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழத்துடன் அவர் வீட்டு வாசலில் நன்றியோடு ஒரு பெண் நின்றிருந்தார்.
சின்ன அண்ணாமலையை நெகிழ்வுறச்செய்த அந்தப்பெண் சரோஜாதேவி. தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரை மறக்காத அந்தக்குணத்துக்கு அடுத்து ஐம்பது ஆண்டுகளுக்கு அவர் திரையில் தோன்றச்செய்தார் அந்தக்கடவுள்.
சரோஜா தேவி எம்.ஜி.ஆரால் கண்டு பிடிக்கப்பட்ட கருப்பு வைரம். வீச்சு விழிகள். அதில் ஒரு விழியில் கருப்பு புள்ளி. குவிந்த உதடாக வரையப்பட்ட உதடுகள். கொஞ்சும் குரல். குளோஸ் நெக் ஜாக்கெட். பூப்போட்ட சேலை. காதருகே ஒரு சிறு சுருண்ட கற்றை. அல்ட்ரா மாடர்ன் கேர்ளுக்கு அடிச்சுக்க வேறு நடிகை கிடையாது. குமரியா? குழந்தையா? என்று குழப்பமடையச்செய்யும் பாவனைகள். ஆனால் அது தான் அவரின் தனித்துவம்.
நினைவஞ்சலிகள்..
Selvan Anbu


