கனடா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பல குடும்பங்கள், உக்ரைனில் இருந்து இணையம் வழியாக விற்பனை செய்யப்படும் உயிருக்கு ஆபத்தான இரசாயனப் பொருளின் விற்பனையை கட்டுப்படுத்துமாறு உக்ரைன் அரசிடம் வலியுறுத்தியுள்ளன.
இந்த இரசாயனத்தை உணவுப் பாதுகாப்புப் பொருளாகக் கூறி விற்பனை செய்ததால் பல இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உக்ரைன் தேசிய காவல்துறை, அந்த இரசாயனம் தற்போதைய சட்டங்களின் கீழ் சட்டவிரோதமானது அல்ல எனவும், அது உணவுப் பாதுகாப்புப் பொருளாக விற்பனை செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
எனினும், குற்றச்செயல் தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
பிரிட்டனின் சஃபோக் பகுதியைச் சேர்ந்த 23 வயதான கிரேஸ் பிரிட்சார்ட், உக்ரைனில் இருந்து அனுப்பப்பட்ட அந்த இரசாயனத்தை உட்கொண்ட பின்னர் உயிரிழந்ததாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.
குடும்பத்தினரின் தகவலின்படி, பிரிட்டிஷ் காவல்துறை முன்பு இரண்டு பொதிகளை பறிமுதல் செய்து நலன்விசாரணையும் மேற்கொண்டிருந்தது.
ஆனால் பின்னர் வந்த மூன்றாவது பொதியை தடுக்க முடியாததால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர். கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த 22 வயதான அன்னேகா டாலின் ஓ'கிரேடியும், உக்ரைனில் செயல்பட்ட இணையதளம் மூலம் அதே இரசாயனத்தை வாங்கி பயன்படுத்திய பின்னர் உயிரிழந்தார்.
அவரது தாய் சூசன் டாலின் ஓ'கிரேடி, தனது மகளின் இணையச் செயல்பாடுகளை ஆய்வு செய்தபோது, தற்கொலையை ஊக்குவிக்கும் இணையக் குழுக்கள் அந்த உக்ரைன் விற்பனையாளரிடம் வழிநடத்தியது தெரியவந்ததாக தெரிவித்தார்.


