TamilsGuide

அனைவருக்கும் தரமான பொதுப் போக்குவரத்து சேவை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை வலியுறுத்தினார்.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் மக்கள் தனிப்பட்ட போக்குவரத்திற்காகச் செலவிடும் சுமையைக் குறைத்து, நாட்டில் தரமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார். இலவச சுகாதாரச் சேவைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் போலவே, பொதுப் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்கும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் ஜனாதிபதி விரிவாகக் கேட்டறிந்தார். பழைய பேருந்துகளை படிப்படியாக சேவையிலிருந்து நீக்கி, புதிய பேருந்துகளை இணைக்கும் திட்டம் மற்றும் நகர்ப்புற குறுகிய தூரப் பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளை அறிமுகப்படுத்தும் யோசனையும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள், நகர்ப்புற கழிவு முகாமைத்துவம் மற்றும் City Branding திட்டங்களின் முன்னேற்றமும் ஆய்வு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்யக்கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி நிதி ஒதுக்குமாறும், வெளிநாட்டு கடன் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு தெளிவான பயன்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Leave a comment

Comment