TamilsGuide

கட்டாய உழைப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை 

கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த புதிய ஒழுங்குமுறை ஜூலை 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, கட்டாய உழைப்பின் மூலம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அகழ்ந்தெடுக்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்வது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களை கருத்தில் கொண்டு, இந்த ஒழுங்குமுறை எந்தெந்தப் பொருட்கள் அல்லது நாடுகளுக்குப் பொருந்தும் என்பதை அரசாங்கம் அவ்வப்போது தீர்மானிக்கும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் கட்டாய உழைப்பால் தயாரிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை, இறக்குமதியாளர்கள் இலங்கைச் சுங்கத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்கான போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கூறி, இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளின் மீது மேலதிக இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் முன்மொழிந்திருந்தார்.

இந்த முன்மொழிவின் கீழ், இலங்கை மீது 12.5 சதவீத மேலதிக இறக்குமதி வரி விதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, கட்டாய உழைப்பு தொடர்பான சட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment