எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.
அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து பல ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.
“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.
- பண்ருட்டி ராமச்சந்திரன் முன்னாள் அமைச்சர்


