டொராண்டோ சல்சா திருவிழாவில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி, 6 பேர் காயம்
கனடா
கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘சல்சா ஆன் செயின்ட் கிளயர்’ வீதித் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செயின்ட் கிளெயர் அவென்யூ வெஸ்ட் மற்றும் ஆர்லிங்டன் அவென்யூ பகுதிக்கு அருகில் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சனிக்கிழமை இரவு 8:12 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அழைப்பு கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் ஐந்து பேரைக் கண்டறிந்தனர். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
விசாரணைகள் தொடர்ந்த நிலையில், இரவு 9:34 மணியளவில் காயமடைந்த ஆறாவது நபர் ஒருவரையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
எனினும், காயமடைந்தவர்களின் நிலைமை குறித்த உடனடி விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவ இடத்தை பொலிஸார் தற்போது தமது பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும், விசாரணைகள் தொடர்வதால் அப்பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அவர் அப்பகுதியிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அங்கிருந்த பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
திருவிழாவில் மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பெரும் பதற்றமும் பயமும் நிலவியதுடன், திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குப் போகுமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டனர். '
சல்சா ஆன் செயின்ட் கிளெயர்' திருவிழா என்பது கனடாவின் முதன்மையான 'இலத்தீன் அமெரிக்க கலாசாரக் கொண்டாட்டம்' ஆகும். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்த திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.






















