TamilsGuide

போகிமொன் கார்டு கடையில் துப்பாக்கிமுனையில் துணிகரக் கொள்ளை

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் லானோடியர் பிராந்தியத்தில் அமைந்துள்ள போகிமொன் கார்டு விற்பனைக் கடையொன்றில் கடந்த ஜூன் மாதம் துப்பாக்கிமுனையில் இடம்பெற்ற துணிகரக் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொண்ட்ரியல் நகரின் வடகிழக்கே உள்ள செயின்ட்-அலெக்சிஸ் பகுதியில் இயங்கும் 'மிஸிங்நோ' என்ற சேகரிப்புப் பொருட்கள் விற்பனைக் கடையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கடந்த ஜூன் 18ஆம் திகதி காலை, கையில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த மர்மநபர், அங்கிருந்த பணத்தைப் எடுக்காமல், நேரடியாக மதிப்புமிக்க போகிமொன் சேகரிப்பு கார்டுகளையே குறிவைத்துள்ளார்.

அப்போது கடையில் இருந்த 10 வயது சிறுவன் உள்ளிட்ட வாடிக்கையாளர்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி, சுமார் 30,000 கனேடிய டொலர் மதிப்புள்ள போகிமொன் கார்டுகளை ஹொக்கி பை ஒன்றில் நிரப்பிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

மேலும், கடையை விட்டு வெளியேறும்போது துப்பாக்கியை கையில் வைத்தபடியே, "நன்றி... இனிய இரவு பொழுது அமையட்டும்" என்று கூறிச் சென்றதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கொள்ளையனை எளிதில் தப்பவிட விரும்பாத கடையின் இணை உரிமையாளர்களான ஜீன்-பிரான்சுவா ஹெட்டு மற்றும் சார்லஸ் ப்ரூல்ட்-பாரிசோ, பேஸ்பால் மட்டைகளை எடுத்துக்கொண்டு கடையிலிருந்து வெளியே விரைந்தனர்.

கொள்ளையர் தப்பிச் சென்ற வாகனத்தை பொலிஸார் எளிதில் அடையாளம் காணும் வகையில், அந்தக் காரின் பின்விளக்குகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடியை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

அவர்களின் இந்தத் துணிச்சலான நடவடிக்கையால், சம்பவம் நடைபெற்ற இரண்டு மணித்தியாலங்களுக்குள் டானி எல்-அவர் என்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்தனர்.

அவர் மீது இக்கொள்ளைச் சம்பவம் மட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும், கொள்ளையடிக்கப்பட்ட போகிமொன் கார்டுகள் மற்றொருவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக நம்பப்படுவதால், அவை இதுவரை மீட்கப்படவில்லை. 
 

Leave a comment

Comment