TamilsGuide

கிழக்கு மாகாண சுற்றுலா வளர்ச்சியில் ஆசிய நாடுகளின் கவனம்

கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து சிறந்த புரிதலைப் பெறுவதும்,  குறிப்பாக சுற்றுலாத்துறையில் காணப்படும் வளர்ச்சி வாய்ப்புகளை ஆராயும் வகையிலும் நேற்றைய தினம் ஆசிய நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தனர்.

மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது தூதுவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு பின்னர் தூதுவர்கள் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்க உள்ள அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபை சார்பில் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் அவை தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டதுடன் மாநகர சபையின் செயல்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறையினை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கான உதவிகளை வழங்குமாறும் இதன்போது மாநகரசபை முதல்வரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஐந்து நாட்டு தூதுவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஒவ்வொரு நாட்டு தூதுவரிடமும் ஒவ்வொரு அபிவிருத்தி திட்டத்திற்கான முன்மொழிவு அறிக்கையும் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர என் தனஞ்செயன், மாநகர சபை உறுப்பினர்கள்,  மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a comment

Comment