ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக மறுபரிசீலனை செய்ய தற்போதைய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (10.07.2026) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேக சிறிவர்தன இந்த தகவலை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது ஒன்லைன் விசா வழங்கும் நடைமுறையை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை எதிர்த்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன், பத்தாலி சம்பிக்க ரணவக்க மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான, நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறை தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வத்தன்மையை ஆராய்வதற்காக தற்போதைய அமைச்சரவை துணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த குழு தற்போது விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும், அதன் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக கால அவகாசம் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது மனுதாரர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன், தற்போதைய அரசாங்கம் குறித்த பரிவர்த்தனையை ரத்து செய்ய தீர்மானித்திருந்தாலும், மனுவை தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களும் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு அறிவித்தல் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.


