TamilsGuide

பறக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விமானி

அர்ஜென்டினாவில் விமானப் பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் ஒருவர், பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த குதித்த பிறகு, விமானத்தில் இருந்த 22 வயது மாணவி தனியாக அந்த விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளார்.

மத்திய அர்ஜென்டினாவின் டோலிடோ பகுதியில் கடந்த சனிக்கிழமை செஸ்னா 150 ரக சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.

இதில் 42 வயதான அனுபவம் வாய்ந்த விமானப் பயிற்றுவிப்பாளர் லியான்ட்ரோ ஆண்ட்ரேஸ் பெர்டாஸோ மற்றும் ரொசாரியோ என்ற 22 வயது மாணவியும் இருந்துள்ளனர்.

விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த மாணவியிடம், "உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும், தொடர்ந்து செய்" எனக் கூறிவிட்டு, பெர்டாஸோ தனது ஹெட்செட் மற்றும் சீட் பெல்ட்டைக் கழற்றியுள்ளார்.

பின்னர், விமானத்தின் கதவைத் திறந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதனால் மாணவி கடும் அதிர்ச்சியடைந்தார்.

இருப்பினும், அந்த மாணவி மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு, கட்டுப்பாட்டை இழக்காமல் விமானத்தை எவ்வித சேதமுமின்றி பத்திரமாகத் தரையிறக்கினார்.

இது குறித்து அந்தப் பறக்கும் பள்ளியின் இயக்குனர் எடுவார்டோ ஆல்வாரெஸ் கூறுகையில், பெர்டாஸோ மிகவும் நல்ல மனிதர் என்றும், அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், வேகமாகப் பறக்கும் விமானத்தின் கதவைத் திறப்பது மிகவும் கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுபவம் வாய்ந்த இந்த விமானியின் திடீர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Leave a comment

Comment