• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இத பாருங்க.. நீங்க செஞ்ச உதவிக்கு காசோ பணமோ அள்ளிக் கூட குடுத்துடுவேன்

சினிமா

#நவரத்தினம் 1977 - சிறுவயதில் மெட்ராஸ் தூர்தர்ஷனில் பார்த்த படம் .
சிவாஜி கணேசனுடன் பெரும் வெற்றிகளைப் பெற்ற ஏ பி நாகராஜன்,  பின்னர் பண நெருக்கடியால் நிதி ஸ்திரத்தன்மைக்காக எம்ஜிஆர் முகாமுக்குச் சென்றார்.
 ஏ பி நாகராஜன் இதற்கு முன்பு எம்.ஜி.ஆருடன் எந்தப் படமும் இயக்கவில்லை என்றாலும், எம் ஜி ஆரும் சிவாஜி கணேசனுடன் ஏ பி நாகராஜன் தயாரித்த தரமான படங்களின் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்து இருந்ததால் ஏபிஎன் கேட்டதும் சம்பளம் பற்றி கேட்காமல் படத்தில் நடிக்க எம் ஜி ஆர் ஒப்புக் கொண்டார்.
சிவாஜி கணேசன் மற்றும் சாவித்ரி நடித்த நவராத்திரி படத்தில்  ஒரு பெண் வீட்டை விட்டு ஓடிப்போய் ஒன்பது வெவ்வேறு ஆண்களைச் சந்திக்கிறாள். அதனால் அவள் படும் அல்லல்கள் அனுபவங்களை சொல்லி  அந்த ஒன்பது வேடத்தையும் நடிகர் திலகம் செய்தார். 
ஆனால் அந்த ரிஸ்க் ‘நவரத்தினம்’ படத்தில் இல்லை. இதில் ஹீரோ எம் ஜி ஆர் சந்திக்கும் ஒன்பது பெண்கள் வெவ்வேறு பிரச்சனையை எதிர்கொள்ள அவர்களுக்கு இவர் எவ்வகையில் உதவி செய்கிறார் என்பதே கதை. 
நவராத்திரி படம் போல மக்கள் திலகத்திற்கு 9 வேடங்கள் தாராமல் சாமர்த்தியமாக அவர் ஒன்பது பெண்களை சந்திப்பதாக காட்டியதில் மட்டுமே படத்தில் ஏபிஎன் முத்திரை இருக்கும். மற்றபடி முழுக்க முழுக்க எம் ஜி ஆர் ஃபார்முலா படம்.
படத்தின் பட்ஜெட்டை மனதில் கொண்டு அதிக வெளிப்புற படப்பிடிப்புகள் இல்லாமல், எம்ஜிஆரின்  சத்யா ஸ்டுடியோவிலேயே அனைத்து காட்சிகளையும் படமாக்கி, குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டது .
ஊட்டியில் உள்ள  ஒரு அரண்மனை மற்றும் பார்சன் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம், அப்புறம் பைக்காரா அணைக்கு அருகிலுள்ள கிளென்மார்கன் போன்ற இடங்களிலும் படமாக்கப்பட்டதில் மட்டும் கொஞ்சம் செலவு இழுத்திருக்கும் . 
வீட்டை விட்டு ஓடி வந்த வசதியான வீட்டு பிள்ளை எம் ஜி ஆர் பெயர் தங்கம். அதில் பதிப்பதற்கு வேண்டிய நவரத்தின நடிகைகள் வரிசை கட்டி வருகின்றார்கள். அதாவது மாணிக்கம்(லதா) , புஷ்பராகம்,( ஜரீனா வஹாப்), மரகதம் ( பி ஆர் வரலட்சுமி) முத்து (சுபா) , கோமேதகம் (ஜெயா)  , வைரம் (ஶ்ரீப்ரியா) ,  நீலம் ( ஒய்.விஜயா) , பவளம்(ஜெயசித்ரா) , வைடூரியம் ( குமாரி பத்மினி) .
மாணிக்கம்(லதா)  : எம் ஜி ஆர் இவரைத் தான் இவர் குடிசையில் முதலில் சந்திப்பது இவரைத் தான். குறத்தி என்பதால் சாமீ.. என்று சொல்லாமல் வார்த்தையை முடிக்க மாட்டார். இடையில் மெட்ராஸ் பாஷை வேறு. ஆனாலும் ஜிப்சி லதா படு கவர்ச்சி சாமியோவ் 😎
புஷ்பராகம்,( ஜரீனா வஹாப்) : இவருடன் ஒரு ஹிந்தி பாட்டு பாடி தலைவர் தோடா தோடா ஹிந்தியில் பேசுவது பஹூத் அச்சா ஹே!  அத்தோடு பி ஆர் வரலட்சுமி, சுபா, ஜெயா ஆகிய ரத்தினங்களை ஒரே மாதிரி சந்தித்து மானத்தை காப்பாற்றுகிறார்.அதுவும் ஹிந்திப்பட ஸ்டன்ட் ஆக்டர் ஷெட்டியுடன் சண்டை போட்டு. ஆனால் படம் முழுவதும் போலீஸை பார்த்தால் மட்டும் ஓடிப் போய் தன்னை காப்பாற்றிக் கொள்கிறார் எம் ஜி ஆர் .
புரியாததை புரிய வைக்கும்"  ஶ்ரீப்ரியாவின் நடத்தையை சீர் செய்து புரிய வைத்து காப்பாற்றுகிறார்.ஆனால் இந்த ஸ்ரீப்ரியா ரத்தினத்தில்  ரொம்பதான் கவர்ச்சி மின்னுகிறது .பின்னே .. பேரு.. வைரம்ல !
 கர்நாடிக் சங்கீதம் பாடி இறுதியில் ஒய் விஜயா & கோ'வை காப்பாற்றுகிறார். 
ஜெயசித்ராவுடன் டவுசர் வயசுலேயே கல்யாணம் பண்ணி மிலிட்டரிக்கு ஓடிப் போன ஏவிஎம் ராஜனை சேர்த்து வைத்து காப்பாற்றுகிறார்.  ஆனால் இந்த தேவையில்லாத ஆணி வைடூரியம் குமாரி பத்மினியை எப்படி காப்பாற்றினார் என்று சொல்லி யாராவது  என்னை காப்பாற்றுங்க🙄

படத்தில் எல்லோரையும் காப்பாற்றிய தலைவரால் இந்த படத்தை காப்பாற்ற முடியவில்லை. ஆனாலும் தேர்தல் பிரச்சார நோக்கங்கள் கட்சி பிரச்சாரம் என்ற கணக்கில் படத்தை தனியாக காப்பாற்றி கரை சேர்க்கிறார் தலைவர்.
இந்த படத்தில் டி எம் சௌந்தரராஜன், எம் எஸ் விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன் ஆகிய காம்போ இல்லாமல் குன்னக்குடி வைத்தியநாதன் இசையின் காம்போ ரசிகர்களுக்கு ஒட்டவில்லை. சில பாடல்கள் ஓகே ரகம். 
படத்தில் நான் ரசித்த வசனங்களில் ஒன்று, 
தேங்காய் சீனிவாசன் அவர் மாடுலேஷனில் சொல்வார்.    " இத பாருங்க.. நீங்க செஞ்ச உதவிக்கு காசோ பணமோ அள்ளிக் கூட குடுத்துடுவேன். ஆனா அதை நீங்க வச்சுக்க மாட்டீங்க.. யாருக்காவது குடுத்துடுருவீங்க."

 

- ஆறுமுகம் சி

Leave a Reply