சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன் - முதல் பொதுக் கூட்டமும், காஞ்சிபுரமும்
புரட்சித்தலைவர் அண்ணா தி.மு.க.வைத் தொடங்கிய பின் அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் கட்சியின் முதல் பொதுக் கூட்டம் நடத்த வேண்டும் என்று விரும்பினார்.
புரட்சித்தலைவர் விரும்பியது போல் காஞ்சி மாவட்டத்தில் முதல் பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடாகியது. காஞ்சி மாவட்ட மக்கள் புரட்சித்தலைவரை வரவேற்க காத்திருக்கின்றனர். நேரம் போக போக கூட்டம் அலை மோதியது. பதட்டமும் அதிகரித்தது.
அன்று, புரட்சித்தலைவருக்கு திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் முதல் பொதுக் கூட்டத்தை வேறொரு நாளில் வைத்துக் கொள்ள விரும்பினார். இந்தத் தகவலை திரு. சைதை துரைசாமி அவர்கள் மூலமாக காஞ்சி திரு.
பன்னீர் செல்வத்துக்கும், மற்றும்
காஞ்சி பாலாஜிக்கும் உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
பதட்டமடைந்த காஞ்சி
பன்னீர் செல்வம்,காஞ்சி பாலாஜி, மற்றும் திரு.சைதை துரைசாமி ஆகியோர் நேராக இராமாவரம் தோட்டத்திற்கு வந்தார்கள் நிலைமையை விளக்கிச் சொன்னார்கள். அத்தோடு திரு. பாலாஜி அவர்கள் சொன்ன அடுத்த வரிதான் மிகவும் முக்கியமானது. கூட்டத்திற்கு புரட்சித்தலைவர் வரவில்லையென்றால் தன்னால் மக்களை சந்திக்க முடியாது. அதனால் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுவேன் என்றார். அப்போது திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தோட்டத்தில் தலைவரோடு இருந்தார். அவரும் புரட்சித்தலைவரிடம் ‘கட்சி தொடங்கி முதன் முதலாக நடைபெறுகின்ற கூட்டம் இதை தவிர்ப்பது அவ்வளவு நன்றாக இருக்காது. இது சிலருக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். ஆகையால் இந்த கூட்டத்திற்கு போவோம்' என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் வற்புறுத்திக் கூறினார்.
பொதுக்கூட்டத்திற்கு புரட்சித்தலைவர் வருகிறார் என்ற தகவலையறிந்து கொண்ட திரு. சைதை துரைசாமி, திரு. காஞ்சி பன்னீர் செல்வம், திரு. காஞ்சி பாலாஜி ஆகியோர் மகிழ்ச்சியுடன் காஞ்சிபுரம் சென்றனர்.
புரட்சித்தலைவரும், அண்ணன் ஆர்.எம்.வீ. அவர்கள் கூறியதை ஏற்றுக் கொண்டு உடனே தனி மருத்துவர் டாக்டர் பி.ஆர். சுப்பிரமணியன் அவர்களை அழைத்து உடலை பரிசோதித்து மருந்துகள் சாப்பிட்டு விட்டு, டாக்டர் பி.ஆர்.எஸ் அவர்களையும் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்றார். காஞ்சிபுரத்தில் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் மிதந்து பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அண்ணா தி.மு.க. என்பது தொண்டர்களுக்கான இயக்கம் என்பதை உறுதிப்படுத்தினார்.
நூல் ஆசிரியர் கே.மகாலிங்கம் பாரத்ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நேர்முக உதவியாளர்.























