• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்த ஜோடி வில்லன்கள்  மிக பிரபலம்

சினிமா

#தியாகம் (1978) படத்தில் இந்த ஜோடி வில்லன்கள்  மிக பிரபலம் .அப்பாவும் மகனுமாக வி கே ராமசாமியும் எம் ஆர் ஆர் வாசுவும் நடித்து இருப்பார்கள் .

நடிகர் திலகத்தின் மார்த்தாண்ட ராஜசேகர சேதுபதி  ஜமீனில் கணக்கராக வேலை பார்த்து வரும் வி கே ராமசாமி சமயம் பார்த்து  சூழ்ச்சிகள் செய்து நடிகர் திலகத்தின் ஜமீன் அதிகாரத்தையும் சொத்துக்களையும் இழக்க வைத்து ஜமீன் குடும்பச் சொத்துக்களை தன் வசம் கைப்பற்றிகொள்கிறார் அத்தோடு நில்லாமல் நடிகர் திலகமும் லக்ஷ்மியும் காதலர்கள் . வீட்டு வேலைக்காரி அன்னத்தை  கெடுத்த விவகாரத்தில் அவர்களில் காதலில் கண்ணி வெடி" வைத்து பிரித்து விடுகிறார் .

ராஜாவைச் சிறைக்கு அனுப்பிய வேளையில் லக்ஷ்மியும் நடிகர் திலகத்தை வெறுத்து ஒதுக்குகிறார். சொத்துக்களை இழந்து அன்பான காதலை இழந்த நடிகர் திலகம் விரக்தியின் விளிம்பில் குடிக்கு அடிமையாகிறார் . குடித்தாலும் நிதானம் இழக்காத நடிகர் திலகம் ஊர் மக்களுக்கு நல்லது செய்து பெருவாரியான மக்களின் அன்புக்கு பாத்திரமாகிறார் . 

இது பொறுக்காத இரட்டை வில்லன்கள் ஊருக்கு புதிதாக வந்து இருக்கும் இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் இவரை பற்றி பொல்லாதது சொல்லி அவர் மனதை மாற்றுகிறார்கள்  . இந்த வில்லத்தனங்களை எல்லாம் எப்படி சமாளித்து நடிகர் திலகம் கரையேறுகிறார் என்பது கதை .

மாற்றுத்திறனாளியாக வாயை கோணிக்கொண்டு கண் சிமிட்டியபடி வி கே ராமசாமியின் மாறுபட்ட வில்லத்தனம் அற்புதமாக இருக்கும் . அந்த கதாபாத்திரத்தில் கொஞ்சம் ஹாஸ்யம் குடிகொண்டு இருந்தாலும் அவர் நடவடிக்கைகள் படு வில்லத்தனமாக இருக்கும் . பட்டு வேட்டி  பட்டு அங்கவஸ்திரம் , வாக்கிங் ஸ்டிக் , மைனர் சங்கிலி என்று டாம்பீகமான தோற்றத்தில் இருப்பார். 

ஊருக்கு புது இன்ஸ்பெக்டர் பாலாஜி வந்ததும் குழைவது , ஜெயிலில் இருந்து திரும்பி வரும் ஜஸ்டின் முனியப்பாவை வரவேற்பது மேஜர் சுந்தராஜனிடம் பொடி வைத்து பேசுவது லட்சுமியிடம் வழிவது நயவஞ்சகமாக  நடிகர்திலகத்திடம் பேசுவது இறுதியில் லக்ஷ்மியை படகில் பலவந்தப்படுத்துவது என ஒரு வில்ல சாம்ராஜ்யமே நடத்தி இருப்பார் விகேஆர் .

நடிகர் திலகம் வி கே ராமசாமியை பார்த்து ஒரு டயலாக் சொல்லுவார் " காலை ஊனம் ஆக்குன கடவுள் உனக்கு மூளையை நிறைய குடுத்துட்டாண்டா "  என்ற அந்த சொல் அந்த விகேஆர் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தும் .

ஆனால் எம் ஆர் ஆர் வாசுவின் வில்லத்தனம் முழுக்க ஹாஸ்யம் தான் . நாகேஷ் படகை மீட்க போய் திலகத்திடம் செமத்தியாக வாங்குவது வீட்டில் அப்பா ராமசாமியிடம் சாட்சிக்காக தலையில் கைத்தடியால் அடி வாங்கி " அவன் அடியே தேவலை நைனா ,நீ மண்டையை புளந்துட்டியே நைனா ' என்று புலம்புவது 

படாபட் ஜெயலட்சுமி முதுகை " இது முதுகா இல்ல ..மொழுவி விட்ட  பளிங்கு தரையா?.. என்று வர்ணித்து அங்கும் திலகத்திடம் அடி வாங்குவது என்று நைனா விகேஆர்க்கு சரிசமமாக ஹாஸ்யத்தில் வில்லத்தனம் பண்ணியிருப்பர் எம் ஆர் ஆர் வாசு .

இறுதியாக பொறியாளரான திலகத்துக்கு  ஒரு பாலம் கட்டுவதற்கான சிவில் காண்ட்ராக்ட் வருகிறது . அதை சூழ்ச்சியால் முறியடிக்க  அவர் பாலத்தை உடைக்கவும் , ஊரை கொளுத்தவும்  திலகம்  மற்றும் இன்ஸ்பெக்டர் பாலாஜியின் பெயரைக்  கெடுத்து  தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைகிறார் விகேஆர் . 

படத்தில் விகேஆர் மற்றும் எம் ஆர் ஆர் வாசுவின் வில்லத்தனம் படத்தின் முக்கிய திருப்பங்களுக்கும் காட்சியின் சுவாரஸ்யத்திற்கும் உதவுகிறது என்பதை மறுக்க முடியாது .

ஆறுமுகம் சி

Leave a Reply