நாடகம், சினிமா, சீரியல்... உதாரணச் சிகரம் கே.பி!
சினிமா
’டைரக்ஷன் டச்’ என்றொரு வார்த்தை எப்போதில் இருந்து திரையயுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருக்கத் தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் இவரின் வருகைக்குப் பிறகுதான், இவரின் படங்களைப் பார்த்துவிட்டுத்தான், இவரின் படக்காட்சிகளையும் வசனங்களையும் கொண்டுதான் ‘டைரக்ஷன் டச்’ என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது. அந்த ‘டைரக்ஷன் டச்’சில் சிகரம் தொட்ட இயக்குநர்... கே.பாலசந்தர்.
பாலசந்தர் படமென்றால் இப்படித்தான் இருக்கும் என்று எல்லைக் கோடுகளெல்லாம் கிழிக்கமுடியாது. ’நீர்க்குமிழி’ மாதிரி சோகம் பிழியக் கொடுப்பார். ‘நாணல்’ மாதிரி திடுக்கிட வைப்பார். ‘பாமா விஜயம்’ மாதிரி சிரிக்கச் செய்வார். ’அனுபவி ராஜா அனுபவி’யில் இரண்டு நாகேஷைக் கொண்டு இன்னும் வெடிச்சிரிப்பு மூட்டினார்.
பாலசந்தர் இயக்கத்தில், ஓடிய படங்கள் ஓடாத படங்கள் என்றிருக்கலாம். நல்லபடம், சரியில்லாத படம் என்றிருக்காது. எந்தப் படமாக இருந்தாலும், அதில் ‘பாலசந்தர் படம்’ என்று சொல்லுவதற்கான விஷயங்களை ஆங்காங்கே தூவியிருப்பார். அதை இன்றைக்கும் சொல்லிச் சொல்லிச் சிலிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
நாடகத்தைத் தொடங்கும் போது, கடவுள் வாழ்த்து போடுவார்கள். பிறகுதான் நாடகம் ஆரம்பமாகும். ஆனால் தன்னுடைய நாடகங்களை திருக்குறளில் இருந்து தொடங்குவதுதான் பாலசந்தரின் வழக்கம். இதுவே பின்னாளில், திரையிலும் எதிரொலித்தது. படத்தை எந்தக் கம்பெனி தயாரித்தாலும் பாலசந்தர் இயக்கிய படங்களில் மட்டும், திருவள்ளுவர் வந்துவிடுவார். ‘அகர முதல எழுத்தெல்லாம்...’ குறளும் குரலும் ஒலித்துவிடும். பின்னர், ‘கவிதாலயா’வின் லோகோவாகவும் திகழ்ந்தார் திருவள்ளுவர். .
எம்ஜிஆரும் சிவாஜியும் முன்னணியில் இருந்த நேரத்தில், முதல் படத்தை இயக்கினார். அதன் நாயகன் நாகேஷ். டிராமா காலத்துப் பழக்கம்; வாடா போடா பழக்கம். பின்னர் எத்தனையோ படங்களில் நாகேஷுக்கு கேரக்டர் கொடுத்துக்கொண்டே இருந்தார். நாகேஷ் உடம்புக்குள் பாலசந்தரும் அவரின் புத்திக்குள் நாகேஷும் ஊடுருவியிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். பின்னர் எம்ஜிஆர் சிவாஜியின் பக்கம் செல்லாமல், எம்ஜிஆர் சிவாஜிக்கு அடுத்த கட்டமாக அந்த ஸ்தானத்துக்கு நடிகர்களாக கமல், ரஜினியைக் கொண்டு வந்தார்.
மருத்துவமனைக்குள்ளேயே இருக்கும் ‘நீர்க்குமிழி’. அதேபோல், ‘நாணல்’, ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’ ஒரு வீட்டுக்குள்ளேயே நடக்கும். ஆனால் ஒவ்வொன்றிலும் வெரைட்டி காட்டியிருப்பார். முதல் படம் பண்ணுகிற காலகட்டத்தில், எம்.எஸ்.வி.யும் கே.வி.மகாதேவனும் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். ஆனால், தன் முதல் படத்தில், தன்னுடைய நாடகத்தில் இசையமைத்து வந்த வி.குமாரை இசையமைப்பாளராக ‘நீர்க்குமிழி’யில் அறிமுகம் செய்தார்.
தன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க, நாகேஷ் போல் அடுத்து அவர் தேர்வு செய்தவர் மேஜர் சுந்தர்ராஜன். சுந்தர்ராஜனுக்கு முன்னே ‘மேஜர்’ எனும் அடைமொழிக்குக் காரணமே பாலசந்தர்தான். ‘மேஜர் சந்திரகாந்த்’ படமும் பாத்திர வார்ப்புகளும் புது தினுசு என்று இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதேபோல, ஜெமினி கணேசனை பலவிதமாகப் பயன்படுத்தினார். ‘வெள்ளி விழா’, ‘தாமரை நெஞ்சம்’, ‘காவியத்தலைவி’, ‘புன்னகை’, ;பூவாதலையா’, ‘நான் அவனில்லை’ என எத்தனையோ படங்கள். வாணிஸ்ரீ, ஜெயந்தி, ராஜஸ்ரீ, சரோஜாதேவி என பலருக்கும் இன்று வரை சொல்லும்படியான கேரக்டர்கள் அளித்தார்.
’அனுபவி ராஜா அனுபவி’, ‘பூவா தலையா’, ‘பாமா விஜயம்’ என்று ஒரு பக்கம் காமெடிப் படமும் ‘நாணல்’ , ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘நூற்றுக்கு நூறு’ என த்ரில்லிங் படங்களும் குடும்பத்துக்குள் நிலவுகிற குழப்பங்களையும் நேர்மையும் வாய்மையும் கொண்ட வாழ்க்கையையும் பாலசந்தர் படங்களில் வெளிப்படுத்தியதே வேறு மாதிரியானவை. ‘இப்படிக் கூட படம் பண்ணமுடியுமா?’ என்று ‘புன்னகை’ படத்தையும் அந்த ‘சத்யா’ கேரக்டரையும் மறக்கவே இல்லை ரசிகர்கள்.
’அரங்கேற்றம்’ பிரமீளா, ’அபூர்வ ராகங்கள்’ ஸ்ரீவித்யா, ஜெயசுதா, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அவர்கள்’, ‘நூல்வேலி’களில் சுஜாதா, ‘மூன்று முடிச்சு’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ஸ்ரீதேவி, ‘மரோசரித்ரா’, ‘தப்புத்தாளங்கள்’, ‘நூல்வேலி’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அக்னி சாட்சி’ சரிதா, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஜெயசித்ரா, ஸ்ரீவித்யா,‘நூற்றுக்கு நூறு’ லட்சுமி, ஸ்ரீவித்யா, விஜயலலிதா, ‘எதிர்நீச்சல்’ ஜெயந்தி என இன்னும் எத்தனையோ படங்களில் பெண் கதாபாத்திரங்கள் ஒளிரும்; மிளிரும். இதைக் கொண்டே பி.ஹெச்டி செய்யலாம். தமிழ்த் திரையுலகில், பெண்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தியது அநேகமாக பாலசந்தராகத்தான் இருக்கும்.
பாலசந்தரின் படமும் கதையும் கதாபாத்திரங்களும் ஒரு நாவலைப் போல் கட்டமைக்கப்பட்டிருக்கும். கதை சொல்லவேண்டியதை, காட்சிகள் சொல்லவேண்டும். காட்சிகள் உணர்த்த வேண்டியதை வசனம் சொல்லவேண்டும், வசனம் சொல்லவேண்டியதை ஒரு பாடலே சொல்லிவிடவேண்டும். சில சமயங்களில், மெளனத்தையும் இசையையும் கொண்டு கூட உணர்வுகளைச் சொல்லிவிடுவார் பாலசந்தர். ஒரு காட்சியை ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் ஆரம்ப - இறுதிக்கு நடுவேயும் நகாசு பண்ணிக் கொண்டே இருப்பார். இவையெல்லாம் ‘பாலசந்தர் டச்’ என்று பிரமிக்கவும் ரசிக்கவும் வைத்தன.
நாகேஷ் ஹிட் லிஸ்ட்டில் பாலசந்தர் வந்துவிடுவார். ஜெமினிக்கும் அப்படித்தான். ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன் ஆகியோர் படங்களின் வரிசையில் பாலசந்தர் படங்களுக்கு முதலிடம் இருக்கும். இப்படி எத்தனையெத்தனை நடிகர்களுக்கோ முகமும் புதிய முகவரியும் கொடுத்தவர் பாலசந்தர். நாகேஷை வைத்து 36 படங்களுக்கும் மேல் இயக்கினார். கமலை வைத்து 30 படங்களுக்கு மேல் இயக்கினார். ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, ஜெயசுதா, ஸ்ரீவித்யா, சுஜாதா, ஜெயந்தி, சரிதா, கீதா, ஜெயப்ரதா, சுமித்ரா, ஷோபா என நடிகைகளை நடிக்கப் பயன்படுத்துகிற அளவுக்கு பலம் கொண்ட கேரக்டர்களை வழங்கினார். இன்று வரைக்கும் தமிழ் சினிமாவில், நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படங்களை இயக்கியவர் பாலசந்தர் அளவுக்கு வேறு எவருமில்லை! .
வி.குமார், எம்.எஸ்.வி., இளையராஜா, வி.நரசிம்மன், மரகதமணி என்றும் கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்றும் இசைக்கும் பாட்டுக்குமாக அப்டேட்டாகிக் கொண்டே இருந்தார். ஒரு பக்கம் அனந்துவும் இன்னொரு பக்கம் ரகுநாத ரெட்டியும் துணை நின்றார்கள்.
நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தார். சினிமாவில் பரபரவென இருக்கும் போதே ‘மின்பிம்பங்கள்’ உருவாக்கி, தொலைக்காட்சி சீரியல்களுக்குள் இறங்கினார். ஒரு சீரியல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இவரின் சீரியல்கள் பலவும் ஆகச்சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன என்பார்கள்.
நாடகம், சினிமா, தொலைக்காட்சி என்பவை மட்டுமின்றி, இயல்பு வாழ்விலும் உதாரண புருஷராகத் திகழ்ந்த கே.பி. சரித்திர ஆச்சரியம்!- இந்து தமிழ் திசை இதழில் வி. ராம்ஜி எழுதியது .






















