TamilsGuide

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து ஆராய்வதற்குமான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது விவசாயத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் மற்றும் அறுவடைக்குப் பின்னரான தேசிய முகாமைத்துவ நிறுவகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் தனித்தனியாக மீளாய்வு செய்யப்பட்டன. செயற்திறன் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் தேவையான நிறுவன மறுசீரமைப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டிலுள்ள அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும் மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்த அலகு ஒன்றின் கீழ் ஒழுங்குபடுத்துவதோடு, நாடு முழுவதும் நடைபெறும் நீர்ப்பாசன மறுசீரமைப்புகளை வரைபடமாக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, விவசாய மற்றும் கைத்தொழில் துறைகளில் இளம் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் குறைந்த வட்டி கடன் திட்டங்களை இளைஞர்களிடையே மேலும் பிரபலப்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

அத்துடன், பல்வேறு அமைச்சுகளின் கீழ் நடைபெறும் விரிவாக்கச் சேவைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க புதிய முன்மொழிவுகளை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

வெளிநாட்டு கடன் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டும் தாமதமாகியுள்ள திட்டங்களை விரைவில் நிறைவு செய்யுமாறும், எதிர்காலத்தில் தெளிவான இறுதி பெறுபேறு இல்லாத திட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். மேலும், நீண்டகாலமாக நிறைவு பெறாத திட்டங்களுக்கு பொறுப்பான திட்டப் பணிப்பாளர்களை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது மற்றும் பயனற்ற திட்டங்களை இரத்து செய்து பயனுள்ள விவசாய நடவடிக்கைகளுக்கு நிதியை மாற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
 

Leave a comment

Comment