TamilsGuide

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த கன்னட நடிகர்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சேயோன்’ படத்தில் பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ்.பி.ஷெட்டி இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடித்து வருகிறார். மேலும் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படம் விருமாண்டி திரைப்படம் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாக வைத்து மதுரையில் நடக்கும் ஆக்ஷன், நகைச்சுவையுடன் கூடிய கிராமப்புற குடும்ப பொழுது போக்கு படமாக எடுக்கப்பட உள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ‘சேயோன்’ திரைப்படத்தை அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு அல்லது நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கன்னட திரையுலகில் 'ஒந்து மொட்டேய கதே', 'கருட கமனா விருஷப வாகன', 'டோபி' மற்றும் 'சுவாதி முத்தின மழ ஹனியே' போன்ற படங்களை இயக்கி, நடித்து புகழ்பெற்றவர் ராஜ் பி.ஷெட்டி. நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'சேயோன்' படக்குழுவினர் பிரத்யேக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, அவர் படத்தில் இணைந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

நெருப்புப் பின்னணியில் மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் அவரது இந்த போஸ்டர், படத்தில் அவர் ஒரு வலுவான அல்லது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment