மலையாளத்தில் வந்த ஒரு த்ரில்லர் படம்தான் இந்த சாணக்யன்
சினிமா
1989ல் மலையாளத்தில் வந்த ஒரு த்ரில்லர் படம்தான் இந்த சாணக்யன். நண்பர் சொக்கலிங்கம் செல்வா சார் அவர்களுக்காக இந்த பதிவு.
கமல்ஹாசன், ஊர்மிளா, ஜெயராம் முக்கிய வேடத்தில் திலகன் நடிப்பில் 1989ல் வெளிவந்த படம்தான் இந்த சாணக்யன். கமல்ஹாசன் முதன் முதலில் ஜெயராமுடன் இணைந்து நடித்த படம், கமல்ஹாசன் மற்றும் திலகன் இருவருக்கும் நடிப்பை பற்றி சொல்லிக்கொடுக்க தேவையில்லை இருவரும் நடிப்புலகின் பல்கலைக்கழகம். இந்த இரு பல்கழைக்கழகங்களும் இணைந்து மிரட்டி இருந்த படம் தான் சாணக்யன். நவோதயா பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது.
முன்பெல்லாம் பல எளிய படங்கள் யூ டியுபிலேயே காணக்கிடைத்தன, பல பழைய படங்களை கருதாமலே விட்டிருந்தனர், இப்போது அதன் முக்கியத்துவம் உணர்ந்து நன்கு காணக்கிடைக்க கூடிய படங்கள் கூட கிடைப்பதில்லை. பணம் வசூலிக்கும் தளங்களில் எடுத்து வைத்து கொண்டு, காச வச்சிட்டு படத்தை தொடு என்கிற ரீதியில் ஆக்கிவிட்டார்கள், இந்த சாணக்யனும் இப்போ அப்படித்தான், சில வருடங்களுக்கு முன் எல்லாம் ஈஸியாகவே பார்த்திருக்கிறேன் இப்பலாம் படத்தை எடுத்து வைத்துக்கொண்டு பணத்தை கட்டிட்டு படத்தை பாரு என எடுத்து வைத்து இருப்பதால் இலவசமாக பார்ப்பது அரிதாக உள்ளது ஜியோ டிவியில் சன் நெக்ஸ்டில் பணம் செலுத்தி இப்படத்தை பார்க்கலாம்.
நன்கு தொழில்நுட்பங்கள் தெரிந்த ஜான்சனாக வரும் கமல்ஹாசன், ரோபோ தொழில்நுட்பம்மூலம் இயக்கப்படும் காரை செலுத்தி முதலமைச்சராக வரும் திலகனை கொ** திட்டமிடுகிறார், அது தோல்வியில் முடியும் சூழலில் பலகுரலில் பேசி அசத்தும் மிமிக்ரி கலைஞர் ஜெயராம் என்ற பெயரிலே வரும் ஜெயராமை சந்திக்கிறார். போலியான வாக்குறுதிகள் கொண்ட உரை ஒன்றை திலகன் பேசுவது போல் அவரின் குரலில் பேசி தருமாறு ஜெயராமிடம் கோரிக்கை வைக்கிறார் கமல், தான் ஒரு அரசு அதிகாரி என்றும் சில போலியான விசயங்களை ஜெயராமிடம் தெரிவிக்கிறார், இதை நம்பும் ஜெயராமும் அப்படி பேசிக்கொடுக்க அந்த ஆடியோவை வைத்து, திருவனந்தபுரம் வானொலி நிலையத்தில் திலகன் குடியரசு தினத்தன்று உண்மையில் பேசுவதற்காக வைத்திருந்த ஒலி நாடா ஆடியோவை எடுத்துவிட்டு இந்த ஆடியோவை வைத்துவிடுகிறார்.
வானொலி ஒலிபரப்பின்போது திலகன் பேசியதாக சில தவறான விசயங்கள் ,தவறாக ஜெயராம் குரலில் பேசப்பட்ட ஒலிநாடா மூலம் வானொலியில் ஒலிக்க திலகன் கட்சியை சேர்ந்தவர்களுமே இதனால் அதிர்ச்சியடைகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கண்டறியும்படி தனது நண்பரும் காவல்துறை உயரதிகாரியுமான கோபாலகிருஷ்ண பிள்ளையாக வரும் மதுவிடம் முதலமைச்சர் மாதவமேனனாக வரும் திலகன் பொறுப்பை ஒப்படைக்கிறார். விசாரணையில் அந்த வானொலி ஒலிபரப்பை கேட்கும் காவல் அதிகாரி மது அந்த ஆடியோவில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்கிறார்.
இதில் கமல்ஹாசன் தான் குற்றவாளி என்ற ரீதியில் சில விசயங்களை விசாரிக்க நேரிடுகிறது.
முதலமைச்சர் திலகனின் மகளை கமல் காதலிக்க, இது பிடிக்காத திலகன் கமல் குடும்பத்தையே தனது செல்வாக்கை பயன்படுத்தி அழித்துவிடுகிறார் திலகன், தன்னை ஏன் இப்படி சிக்கலில் மாட்டிவிட்டாய் என ஜெயராம் கேட்க அதன் மூலம் கமல் பற்றிய உண்மை தெரிய வருகிறது.
ஜெயராம்க்கு இந்த விசயம் தெரிய வந்த உடன்சொல்ல அவரும் அவரின் கடந்தகால நிலையை நிலையை கேள்விப்பட்டு திலகனின் குரலில் பேசுவதோடு அவருக்கு உதவிகளும் செய்கிறார். மேலும் வேலையில்லாத இளைஞர்கள் குறித்து முதலமைச்சர் அவதூறாக பேசியதாக சில ட்ரிக்குகளை செய்து மேலும் திலகன் பெயரை கெடுக்கின்றார் கமல்.
மேலும் முதலமைச்சர் திலகனின் பேரிடர் நிவாரண நிதியை திருடவும் கமல் முயற்சி செய்கிறார். கமலின் திலகனுக்கு எதிரான அத்தனை முயற்சியும் பழித்ததா? திலகன் என்ன ஆனார், கமல் இறுதியில் என்ன ஆனார் என்பதை பரபரப்பும் விறுவிறுப்பும் கலந்து தந்த படம்தான் இந்த சாணக்யா. உண்மையில் திலகனின் நடிப்பும் கமல்ஹாசனின் நடிப்பும் அப்பாவி இளைஞராக வரும் மிமிக்ரி கலைஞர் ஜெயராமின் நடிப்பு என அனைத்தும் அபாரம்.
இப்படத்தில் நடிகர் மம்முட்டி நடிக்க வேண்டியதாம் முதலில் அவரைத்தான் கேட்டிருக்கிறார்கள், அவர் நடிக்க முடியாமல் போகவே அப்போது கேரளத்தில் கொச்சியில் அபூர்வசகோதரர்கள் படப்பிடிப்பில் இருந்த கமலுக்கு இந்த கதையை சொன்னாராம் இயக்குனர் டி.கே ராஜீவ்குமார், கமலுக்கு இக்கதை பிடித்துப்போக நன்கு சிறப்பாகவே நடித்திருந்தார். படத்தின் திரைக்கதையை சப் ஜான் என்ற மலையாள நடிகரும், பட இயக்குனர் ராஜீவ்குமாரும் சேர்ந்து எழுதி இருந்தனர். உண்மையில் படம் நன்றாக இருந்தது. படத்திற்கு அழகான விறுவிறுப்பூட்டும் இசையை கொடுத்திருந்தவர் இசையமைப்பாளர் மோகன் சித்தாரா. நடிகை ஊர்மிளா இந்தியன் படம் வெளியாவதற்கு ஆறு ஏழு வருடங்கள் முன் கமலுடன் இணைந்த முதல் படம். அதற்கு முன்பே ஹிந்தியில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருந்தாலும் ஊர்மிளாவுக்கு இதுவே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த முதல் படம். இதன் பிறகுதான் கதாநாயகியாக வலம் வர தொடங்கினார் ஊர்மிளா. மொத்தத்தில் சாணக்கியன் சிறப்பானதொரு திரைப்படம்.





















