TamilsGuide

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல் நடப்பு ஆண்டில் கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. நேற்று (03) நள்ளிரவு வரையிலான தரவுகளுக்கமைய,  நாடு முழுவதும் 58, 810 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 39 மரணங்களும் பதிவாகியுள்ளன. தற்போது மரண வீதம் 0.07% ஆகக் காணப்படுகிறது.

இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் மிக அதிகமாக 21 547 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மே மாதத்தில் 8590 பேரும், ஜனவரியில் 7866 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்களிலேயே 3422 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாண ரீதியில் அவதானிக்கும் போது, மேல் மாகாணம் 30 876 நோயாளர்களுடன் (52.50%) மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தென் மாகாணத்தில் 9316 (15.84%) நோயாளர்களும்,  சப்ரகமுவ மாகாணத்தில் 5129 (8.72%) நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில்,  கொழும்பு 12, 017 (கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 2514 பேர் உட்பட), கம்பஹா 11, 740, மாத்தறை 4262 என நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் 142 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவும் அதிவேக அபாய வலயங்களாக  அடையாளம் காணப்பட்டுள்ளன.

டெங்கு பரவல் தீவிரமடைந்து வருவதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்குமாறும் நீர் தேங்கும் இடங்களை அழித்து நுளம்புகள் பெருகுவதைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறும் சுகாதாரத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
 

Leave a comment

Comment