• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏவிஎம் நிறுவனத்தினரை வியக்கவைத்த பாக்யராஜ்....

சினிமா

‘முந்தானை முடிச்சு’ படத்துக்காகக் கதை சொன்ன விதத்திலேயே ஏவிஎம் நிறுவனத்தினரை வியக்கவைத்தாராம் பாக்யராஜ். சொன்ன கதையை அச்சுப் பிசகாமல் படமாக்கியும் தந்ததைப் பார்த்து படத் தயாரிப்பு ஜாம்பவான்களான ஏவிஎம் குழுவினர் அசந்துவிட்டார்களாம். ஏவிஎம் சரவணன் தனது சுயசரிதையில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘விடியும் வரை காத்திரு’, ‘அந்த ஏழு நாட்கள்’, ’தூறல் நின்னுப்போச்சு’ போன்ற படங்கள் எப்போது டிவியில் வந்தாலும் முடிந்தவரை முழுமையாகப் பார்த்துவிடுவேன். 🙏

பாக்யராஜின் ’தூறல் நின்னுப்போச்சு’ படத்தின் கதையோட்டமும் திருப்பங்களும் மிக நேர்த்தியானவை. குறிப்பாக, மாபெரும் நடிகரான செந்தாமரைக்கு அவர் அளித்த முக்கியத்துவம் அவரது உயர்ந்த ரசனையைக் காட்டியது. அதேபோல, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’. என்ன ஒரு திரைக்கதை.  அற்புதமான நகைச்சுவை இழையோடும் திரைக்கதையை, அதீத உணர்ச்சிக் குவியலைத் தவிர்த்து சிறப்பாக எழுதியிருப்பார். கல்லாப்பெட்டி சிங்காரத்துக்குப் பல படங்களில் முக்கியத்துவம் கொடுத்தார். ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் பாக்யராஜ் நாடக ஒத்திகை நடத்தும் காட்சிகள் தமிழ் சினிமாவில் அதிகம் பார்த்திராதவை. அட்டகாசமான சிரிப்பை வரவழைப்பவை. தலைவன் கவுண்டமணி வேறு இருப்பார். சொல்ல வேண்டுமா! ஒரு காட்சியில் சரியாக நடிப்பு வரவில்லை என்று ஒரு அமெச்சூர் நடிகரைத் திட்டிவிட்டு பாக்யராஜ் நடித்துக் காட்டுவார். அந்த நடிகர் சோர்ந்துபோய் கவுண்டமணி அருகில் செல்லும்போது கவுண்டர் சொல்வார்: ‘அவன் நடிப்புக்கு உன் நடிப்பு எவ்வளவோ பரவால்ல!’  

‘தூறல் நின்னுப் போச்சு’ படத்தில் பந்தாவாகப் பெண் பார்க்க வந்திருக்கும் பாக்யராஜை ஒரு மூதாட்டி ‘தொண மாப்ள்’ என்று விளிப்பதுடன், அருகில் இருக்கும் சிவராமனைப் பார்த்து, ‘மாப்ள எவ்வளோ அழகா இருக்காரு’ என்பார். அத்துடன் பாக்யராஜைப் பார்த்து, ‘இவனைப் போய் தொண மாப்ளயா கூட்டி வந்திருக்கியே… இவனும் இவன் மூஞ்சியும்! கெட்ட கேட்டுக்குக் கழுத்துல மப்ளர்’ வேற என்பார். அப்போது, கதை திரைக்கதை, வசனம் பாக்யராஜ் என்று டைட்டில் விழும். இதற்கெல்லாம் எவ்வளவு துணிச்சல் வேண்டும்!

‘இன்று போய் நாளை வா’ படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கே இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருப்பார்.  'விடியும் வரை காத்திரு’ படத்தின் சஸ்பென்ஸ் காட்சிகளும் திருப்பங்களும் நம்பகத்தன்மையுடன் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும்.

அவரை மாதிரி சுவாரசியமாகக் கதை சொல்லும் தன்மை யாரிடமும் இல்லை என உறுதியாகச் சொல்ல முடியும்.  ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது பாட்டி பல்டி எல்லாம் அடித்து ஓடும் காட்சியும், லிவிங்ஸ்டனின் திட்டம் தவிடுபொடி ஆகும் காட்சியிலும் பாக்யராஜ் அட்டகாசமாக ஸ்கோர் செய்திருப்பார். 

அவரது பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு பேட்டியில் ‘ஒரு கை ஓசை மட்டும் பாக்கி இருந்தது. அதையும் ஒரு இந்தித் தயாரிப்பாளர் அண்மையில் வாங்கிக்கொண்டார்’ என்று பாக்யராஜ் சொன்னதாகப் படித்திருக்கிறேன். திரைக்கதை எழுதுவதில் இருக்கும் நுட்பங்களை ‘பாக்யா’ இதழில் கேள்வி பதில் பகுதியில்கூட மிக இயல்பாகக் கற்றுக்கொடுத்திருக்கிறார். மிகச் சிறந்த கலைஞனை இழந்து நிற்கிறோம்!

Rukmani Palaniappan

Leave a Reply