• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒட்டாவாவில் வரலாறு காணாத வானிலை குறித்து எச்சரிக்கை

கனடா

கனடா தினத்தில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் பாதிப்புகளில் இருந்து ஒட்டாவா நகரம் இன்னும் மீளாத நிலையில், அங்கு மீண்டும் கடுமையான சூறாவளி மற்றும் மோசமான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவாவிற்கு 'மஞ்சள் நிற' கடுமையான இடியுடன் கூடிய சூறாவளி எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா விடுத்துள்ளது. இதன்படி, பலத்த காற்று, பெரிய அளவிலான ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் புயல் காரணமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் பிங் பாங் பந்து அளவிலான பெரிய ஆலங்கட்டி மழை பொழிய வாய்ப்புள்ளது.

40 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் இப்பகுதியில் சுழற்காற்று ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த இடியுடன் கூடிய புயல் ஆபத்து நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கனடா தினத்தின்போது ஒட்டாவா விமான நிலையப் பகுதியில் மட்டும் 118 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருந்தது.

இதனால் பல கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், வீதிகள் மற்றும் அடித்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மேலும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டது. இந்தத் துயரத்திலிருந்து ஒட்டாவா மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மழை ஒருபுறமிருக்க, ஒட்டாவாவில் கடுமையான வெப்பமும் அதிக ஈரப்பதமும் நீடித்து வருகின்றது. இதனால் அங்கு 'ஆரஞ்சு நிற' வெப்ப அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply