• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரு தலைமுறைகள் அவர்களின் மிகுதிறன்

ஜேர்மனியில் பவாறியா மாநிலத்தில் எஃகிங் (Eching) என்ற நகரில் ஓவியக் கண்காட்சி ஒன்று 09.06.2026 இலிருந்து 26.08.2026 வரை நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இக் கண்காட்சி ஆனது ‘தமிழர் விழுமியங்களும் வாழிட நகர பிரதிபலிப்பும்' என்ற தலைப்பில்
இடம்பெறுகின்றது. இந்த ஓவியக் கண்காட்சி ஆனது தந்தையும் மகனும் அதாவது இருதலை முறையினரின் 55 ஓவியப் படைப்புகள் இடம் பெறுகின்றன.
கண்காட்சி தொடக்க விழாவின் போது ASZ இன் (கண்காட்சி இடம்பெறும் நிலையம்) துணை நிர்வாகி Barbara Hammcich பேசுகையில் தந்தையும் மகனும் ஓவியக் கண்காட்சியை நடாத்துவது மிக அபூர்வமானது. இதனை எமது நிலையத்தில் நடாத்துவது பெருமையாக உள்ளது. மேலும் எல்லா வயது பிரிவினதும் பார்வையாளர்களாக பங்கேற்றிருப்பது சிறப்பம்சமாகும். இதனை கலாச்சார மையம் எஃகிங் ஏற்பாடு செய்துள்ளது எனத் தெரிவித்திருந்தார். கலாச்சார மையம் எஃகிங் இன் ஆணையர் சிபில்லே சிமிச்சன் (Sybille Schmidtchen) தனது உரையின்போது ஜேர்மன் மொழியில் ஒரு பழமொழியை கூறியிருந்தார். அதன் பொருள் பிள்ளைகள் பெரும்பாலும் பெற்றோர்களின் திறமைகளை கொண்டிருப்பார்கள் என்பதாகும். அவ்வாறே இவ் ஓவியக் கலைத்திறனானது இவர்களிடையே மூன்றாவது
தலைமுறையாக தொடர்கிறது என குறிப்பிட்டிருந்தார். எஃகிங் நகரபிதா Michael Steigerwald அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆரம்ப நிகழ்வின் போது யுகாக்ஷக்ஷ் அவர்களுடைய மழலையர் கூட (Kinder Garden) நிர்வாகி மற்றும் ஆசிரியர்கள், பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்கள் மற்றும் இதுவரை யுகாக்ஷிற்கான உதைபந்தாட்ட பயிற்சியாளர்களாக இருந்த அனைத்து பயிற்றுவிப்பாளர்கள் கால்பந்து கழகத்தின் நிர்வாகிகள் பிரதிநிதிகள், இன்றைய பாடசாலையின் ஓவிய ஆசிரியர் வகுப்பாசிரியர், தடகள விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகிகள்,
பயிற்றுவிப்பாளர்கள் என்போருடன் இந்த நகர பகுதி மக்கள், முன்சன் தமிழாலய நிர்வாகி மற்றும் ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தது சிறப்பம்சமாகும்.

மீசாலையை சேர்ந்த காலம் சென்ற ஓவியர் கலாபூசணம் பொன்னையா இராசகுலசிங்கம் (தேவர், மீசாலை) பல விருதுகள் பெற்ற புகழ்பெற்ற ஓவியர் அவர்களின் வழியொற்றி ஓவியக் கலைத்திறன் குடும்ப மரபாக தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் மகன் யுகேதர் இராசகுலசிங்கம் இந்தியாவில் ஓவிய நுண்கலைப் பட்டப்படிப்பினை நிறைவு செய்தவர் என்பதும் 2009ம் ஆண்டு ஜேர்மனிக்கு குடிபெயர்ந்தவர். ஜேர்மனியின் ஊடக வடிவமைப்பு துறையில் பயிற்சி பெற்று ஓவிய ஆசிரியராகவும் பல கண்காட்சிகளில் பங்கேற்கும் கலைஞராகவும் செயற்பட்டு வருகிறார். இவருடைய 14 வயதுடைய மூத்த மகன் யுகாக்ஷ் யுகேதர் சிறுவயதில் இருந்தே ஓவியம் வரையத் தொடங்கினார். தந்தையின் வழிகாட்டுதலால் அவரது திறமை வேகமாக வளர்ந்தது. ஜேர்மனியில் சிறுவயதில் இருந்து பல ஓவியப் போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். 11 வயதிலேயே தமிழ் கலாச்சாரத்தை மையமாக கொண்ட ஓவியக் கண்காட்சியை தமிழாலயம் முன்சனில் தமிழர் திருநாள் விழாவின் போது காட்சிப்படுத்தியிருந்தார். ஓவியத்துடன் சேர்ந்து பியானோ இசைக்கலைஞராகவும், கால்பந்து, தடகள வீரராகவும் மேலும் வாசிப்பு மற்றும் எழுத்தாற்றல் இருமொழிகளிலும் கொண்டவராகவும் தமிழ் மொழியில் சிறந்த ஆளுமை கொண்டவராகவும் வளர்ந்து வருகின்றார். கண்காட்சி தொடக்க விழாவில் விழாவை தொடங்கி வைக்க இவரின் இளைய சகோதரர் யுதீக்ஷz யுகேதர் டிறம்பெற் இசைக்கருவியை வாசித்து விழாவை ஆரம்பிக்க யுகாக்ஷ் யுகேதர் பியானோ இசை நிகழ்வையும் வழங்கினார். இவர்களுடன் ஒன்றுவிட்ட சகோதரர் அக்சரன் சுஜீவனும் இணைந்து கிற்றார் இசையையும் வழங்கினார்.
கண்காட்சியில் எஃகிங் நகரின் முக்கிய பகுதிகள், நீர் நிலைகள், பாரம்பரிய அடையாளங்களும் இடம் பெற்றிருந்தன. அத்தோடு தமிழர் பாரம் பரிய அடையாளங்கள், கிராமங்களின் அழகு, எமது கற்பகதருவான பனை மரத்தோப்புகள், விவசாயம், கடலோர காட்சிள், காளையடக்குதல், தைப்பொங்கல் என்பவற்றை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன. தந்தையும் மகனும் தமிழ் பாரம்பரியத்தையும் ஜேர்மனியில் வாழும் நகரின்
பிரதிபலிப்புகளையும் ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றனர். யுகா, யுகேதர் தனது உரையின்போது தனது ஓவியங்ள் தாயகத்திலும் வாழ்விட நகரிலும் கால ஓட்டத்தில் மருவி அல்லது உருமாறி வருகின்ற இயற்கை தோற்றங்களை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளன என்பதை குறிப்பிட்டிருந்தார். கண்காட்சியின் முக்கிய நிகழ்வாக ஓவிய ஆற்றுகை நிகழ்வின்போது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு அமைவாக அவர்கள் முன்னிலையில் அல்ப்ஸ் பனி மலை தோற்றத்தினை வரைந்து காட்டினார். அந்த ஓவியம் ஏலத்தில் 1000€ நுக்கு தீர்வானது. இந்த ஓவியத்தை SpicyBayer நிறுவனர் குலதீபன் குலசேகரம் அவர்கள் வாங்கினார். கிடைத்த தொகையில் 500€ யுகாக்ஷ் யுகேதர் அங்கத்துவம் வகிக்கும் TSV எஃகிங் இளையோர் கால்பந்து கழகத்திற்கும் மீதி 500€ கலாச்சார மையம் எஃகிங்க்கும் நன்கொடையாக வழங்கப்பட்டது. இவ் ஓவியக் கண்காட்சி இரண்டு தலைமுறைகளின் கலைத்திறனை மட்டுமல்லாது தமிழர் விழுமியங்களையும் பவேரியாவில் வாழும் அவர்களின் புதிய வாழ்க்கையையும் இணைக்கும் ஒரு பண்பாட்டுப் பாலமாக அமைந்துள்ளது என ‘மேர்கூர்’ பத்திரிகையின் பிறைசிங் (Frising) நகரப் பதிப்பில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இரு பத்திரிகைகளிலும் கண்காட்சி பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இந்த ஓவிய ஆற்றுகை நிகழ்வானது மீண்டும் ஒரு அமர்வாக தமிழ் உறவுகளுடன் எதிர்வரும் 11ம் திகதி யூலை மாதம் நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply