உலகின் மிக முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதையான பனாமா கால்வாயை சீனா தன்வசப்படுத்துவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும், தேவைப்பட்டால் அமெரிக்கா அதனை மீண்டும் கைப்பற்றும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கரீபியன் கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் வகையில், சுமார் 82 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கால்வாய் அமைந்துள்ளது.
உலக கடல்சார் வணிகத்தில் 5 சதவீதமும், அமெரிக்காவின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 50 சதவீதமும் இந்த கால்வாய் வழியாகவே நடைபெறுகின்றன.
தற்போது இந்த கால்வாயைப் பயன்படுத்துவதற்காக, பனாமா அரசு அமெரிக்காவிடம் இருந்து பெரும் தொகையைக் கட்டணமாக வசூலித்து வருகிறது.
அமெரிக்க கடற்படைக் கப்பல்களிடம்கூட இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதுதான் டொனால்ட் டிரம்பின் முதன்மையான குற்றச்சாட்டாக உள்ளது.
அமெரிக்கர்களின் உழைப்பில் உருவான இந்த கால்வாயில் தற்போது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி டிரம்ப், பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அதனை அமெரிக்கா மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.


