TamilsGuide

மட்டக்களப்பு புதிய பாலம் இடிந்தது - தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை

மட்டக்களப்பில் உடைந்து வீழ்ந்துள்ள புதிய பாலத்துக்கு பதிலாக பெய்லி ரக பாலத்தை தற்காலிமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

அதன்படி, தற்காலிக பாலம் அமைக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்காலிக பாலம் அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 40 வருடங்கள் பழமையான மட்டக்களப்பு புதுப்பாலத்தில் ஏற்பட்டிருந்த வெடிப்புகள் தொடர்பில் ஏற்கனவே அறிக்கையிடப்பட்டிருநததாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி மாலை குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த பகுதியில் நிரந்தர பாலம் அமைக்கப்படும் வரை, தற்காலிகமாக இடப்படவுள்ள பெய்லி பாலம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இடிந்து வீழ்ந்துள்ள மட்டக்களப்பு புது பாலமானது, மட்டக்களப்பு நகருக்கு பிரவேசிப்பதற்கான பிரதான பாலங்களில் ஒன்றாக உள்ளது.

மட்டக்களப்பு போதனா மருத்துவமனை, பாடசாலைகள் உட்பட பல்வேறு கேந்திர முக்கியத்துவமான உள்ளக போக்குவரத்திற்குரிய பிரதான வழியாக குறித்த பாலம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment