கடந்த 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு 2026ஆம் ஆண்டில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச வருமானம் கணிசமாகக் குறையும் என நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான நிதி மூலோபாய அறிக்கையிலேயே இந்த விபரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மானியங்கள் உள்ளடங்கலாக 2025ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 16.7 சதவீதமாகக் காணப்பட்ட ஒட்டுமொத்த அரச வருமானம், இந்த 2026ஆம் ஆண்டில் 15.8 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டில் நாட்டில் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், அரசாங்கத்திற்கு ஒருமுறை மாத்திரம் கிடைக்கப்பெற்ற பாரிய வரி வருமான அதிகரிப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் வருமான சேகரிப்பு மீண்டும் அதன் சாதாரண நிலைக்குத் திரும்பியமையே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என நிதி அமைச்சு விளக்கியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி காலத்தில், இலங்கையின் அரச வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4 சதவீதம் வரை மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருந்தது.
இது அந்த காலகட்டத்தில் உலகிலேயே மிகக் குறைந்த வருமான மட்டங்களில் ஒன்றாக அமைந்திருந்ததாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான வரி ஆளுமைக் கொள்கைகள் மற்றும் வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் காரணமாக வரி அடிப்படை விரிவடைந்துள்ளது.
அத்துடன் வரி ஏய்ப்பு மற்றும் வரி இழப்புகளைக் குறைப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் தற்போதைய வருமான நிலை ஓரளவு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு வருமானச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட போதிலும், சர்வதேச ரீதியாக நிலவும் சில காரணிகள் நாட்டின் பொருளாதார இலக்குகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என நிதி அமைச்சு எச்சரித்துள்ளது.
குறிப்பாக, மத்திய கிழக்கின் தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலைகள், உலகளாவிய வர்த்தகத் தடைகள் மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்படக்கூடிய திடீர் மாற்றங்கள் காரணமாக, எதிர்காலத்தில் அரசாங்கம் திட்டமிட்டுள்ள அரச வருமான இலக்குகளைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது பெரும் சவாலாக அமையலாம் என நிதி அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.


