TamilsGuide

நாடகக்கலைஞர்களை திரைப்பிரவேசம் செய்ய வைத்து வாழவைத்த பாக்யராஜ் 

பாக்யராஜ் வாழ்ந்த காலத்தில் சினிமா உச்சத்தில் இருந்தது. வாழ்வை, மனிதர்களை, பெண்களை அவர் எப்படியெலௌலாம் கவனித்திருக்கிறார் என்பதை அவர் படங்களைப்பார்த்து வியந்திருக்கிறேன்.
அவர் குரு பாரதிராஜா சாமானியர்களை திரை நட்சத்திரம் ஆக்குவார். ஆனால் பாக்யராஜ் நாடகக்கலைஞர்களை திரைப்பிரவேசம் செய்ய வைத்து வாழவைத்திருக்கிறார். 
கவுண்டர் மணி என்கிற நடிகரை '16 வயதினிலே' படத்தில் நடிக்க வைத்த போது கவுண்டமணி என தவறாக பெயரை எழுதியவர். அதுவே அவர் பெயராக நிலைத்தது. 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ராதிகாவின் அக்கா கணவர் வேடத்துக்கு டெல்லி கணேஷை பாரதிராஜா மனதில் நினைத்திருக்க இவர் கவுண்டமணியைச்சொல்லி சிபாரிசு செய்கிறார். வேடம் மணிக்கு என கன்ஃபர்ம் ஆனதும் அவரைத்தேடி நள்ளிரவில் அவர் வீடு வரை போகிறார். இவரைப்பார்த்ததும் கவுண்டமணி "ஒத்துக்கிட்டாரா?..எனக்கு வேடம் உண்டா?" என ஓடி வந்து கேட்டதும் அவரை அடுத்துள்ள முக்கு கோவிலுக்கு அழைத்துப்போகிறார். தானே வாங்கிக்கொண்டு வந்த கற்பூரம், தீப்பெட்டியைக்கொடுத்து ஏற்றச்சொல்கிறார் பாக்யராஜ். 
'இந்தப்பாத்திரத்தில் இனி கவுண்டமணிக்கு ஏறுமுகம் தான்' என உணர்ந்து அதை வெறும் வாய் வார்த்தையோடு சொல்லாமல் தானே கற்பூரம் வாங்கி கோவிலுக்கு அழைத்துப்போய் சூடம் ஏற்ற வைத்து சொல்லி இருக்கிறாரென்றால் அவர் கவுண்டமணியோடு கொண்ட நட்பின் ஆழம் வியக்க வைக்கிறது.

நாடகக்கலைஞர்கள் மேல் தனி வாஞ்சையோடு அவர் அணுகிய விதத்தால் சங்கிலி முருகன், கவுண்டமணி, கே.கே.சௌந்தர், செந்தில், கல்லாப்பெட்டி சிங்காரம், செந்தாமரை, குலதெய்வம் ராஜகோபால் என வளர்ந்த கலைஞர்கள் ஏராளம். 
தன்னோடு வாய்ப்பு தேடிக்கொண்டு அலைந்த மூர்த்தி என்கிற வாலிபன் தான் இயக்குனரானதும் "இன்னும் எத்தனை நாள்யா நடிக்க சான்ஸ் தேடுவ..வா...இந்த நடிப்பெல்லாம் தூக்கிப்போட்டு விட்டு என் கூட அசிஸ்டண்ட்டா வந்துடு.." என அழைத்து அவரை பார்த்திபனாக்கியவர். 
இலக்கிய உலகில் உள்ளவர்கள் திரையில் பிரகாசிக்க வேண்டுமென பிரபஞ்சன் வசனம் எழுதிய 'தேநீர்' கதையை(ஆசிரியர் டி.செல்வராஜ்) ஊமை ஜனங்கள் என படமாக்கியபோது இயக்குனர் ஜெயபாரதியின் மனைவியோடு நாயகனாக நடித்துக்கொடுத்தவர். பாலகுமாரனை இயக்குனராக்கியது தெரிந்த கதை. பட்டுக்கோட்டை பிரபாகரை தனது உதவி இயக்குனராகவே வைத்திருந்தார்.
சென்னைக்கு பயணமான போது முதலில் தான் வேலை செய்த இயக்குனர் ராமகிருஷ்ணனுக்கு 'பொய் சாட்சி' படத்தில் நடித்து கொடுத்தார். தயாரிப்பாளரோ பாக்யராஜ் பெயரை வைத்தால் தான் விற்பனையாகுமென சொல்ல ராமகிருஷ்ணன் விலகிவிடுகிறார். மிச்சத்தை பாக்யராஜே எடுத்து பூர்த்தியாக இயக்குனர் பெயராக பாக்யராஜ் பெயர் வேண்டுமென சொல்ல பாக்யராஜ் மறுக்க கடைசியில் இயக்குனர் பெயரில்லாமல் வந்ததாக சொல்லப்படுகிறது.
தூயவனிடைம் காப்பிரைட்டராக சில நாட்கள் இருந்ததால் அவரை தயாரிப்பாளராக்கி 'விடியும் வரை காத்திரு' படத்தில் நடித்தார்.
தன் முதல் படத்தில் சிறு ரோலில் நடித்த சி.ஆர்.சரஸ்வதியை தன் கட்சியில் மகளிரணி தலைவியாக்கி இருந்தவர் வருமானத்துக்காக ''எங்க சின்ன ராசா'வில் சித்தியாக்கினார். சரஸ்வதி பெரிய நடிகையானார்.
சந்தித்து உரையாட நினைத்திருந்த ஒருவர். இதுவும் கனவாகி விட்டது.
பலரது வாழ்க்கையின் திரைக்கதையைமாற்றி எழுதிய ராஜாவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்... 

 

Selvan Anbu

Leave a comment

Comment