திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நாளை கருட சேவையும், ஜூலை 1-ம் திகதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.
சென்னையின் ஆன்மிக அடையாளமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் திகழ்கிறது. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாதத்திலும், மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் நரசிம்மருக்கு ஆனி மாதத்திலும் பிரம்மோற்சவம் நடைபெறும்.கொடியேற்றம் அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவ விழா, நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, தர்மாதிபீடத்தில் நரசிம்ம சுவாமி மாட வீதிகளில் வலம் வந்தார். இரவு 7.45 மணி அளவில் புன்னை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை நாளை (ஜூன் 27) அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
28-ம் திகதி காலை சூரியபிரபை, இரவு சந்திரபிரபையில் பெருமாள் எழுந்தருள்கிறார். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 1-ம் திகதி நடைபெறுகிறது.
அன்று அதிகாலை 5 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள, காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கும். ஜூலை 4-ம் திகதி சிறிய திருத்தேர் நிகழ்வுடன் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.


