கானானோக் (Gananoque) நகரில் உள்ள பொது தீயணைப்பு குழாய்களில் (Fire Hydrants) இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், கிங்ஸ்டன் (Kingston) நகரைச் சேர்ந்த ஒரு நபர் மீது கானானோக் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஜூன் 4 மற்றும் 5 ஆகிய திகதிகளில், தனியார் தண்ணீர் நிறுவனம் ஒன்று நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தீயணைப்பு குழாய்களில் இருந்து அனுமதியின்றி தண்ணீரைத் திருடுவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 13 அன்று பொதுப் பயன்பாட்டுத் துறை ஊழியர்கள் தீயணைப்பு குழாய் ஒன்றிலிருந்து வழக்கத்திற்கு மாறாகத் தண்ணீர் உறிஞ்சப்படுவதைக் கவனித்துக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய தண்ணீர் லாரியையும் (Water Truck) அதன் சாரதியையும் மடக்கிப் பிடித்தனர்.
இந்தச் சம்பவத்தில் 44 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது 5,000 டாலருக்கும் குறைவான மதிப்புடைய பொருள்களைத் திருடிய இரண்டு குற்றச்சாட்டுகளும், குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்த ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும், ஆதாரம் மற்றும் விசாரணைக்காகப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் லாரியைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பிணையில் விடுவிப்பது தொடர்பான நீதிமன்ற விசாரணைக்காக அந்த நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது அடையாளத்தைக் காவல்துறையினர் வெளியிடவில்லை.
ஒட்டாவா நகர மையத்திலிருந்து தென்மேற்கே சுமார் 164 கிலோமீட்டர் தொலைவில், செயின்ட் லாரன்ஸ் நதிக்கரையில் கானானோக் நகரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


