ஜப்பானில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் இவாத்தே மாகாணத்தின் வடக்குப் பகுதிக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் இல்லாததால் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது பாரிய சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தோஹோகு ஷின்கான்சென் அதிவேக ரயில் சேவைகள் உள்ளிட்ட சில ரயில் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் மிக அதிக நில அதிர்வு செயல்பாடுகள் காணப்படும் பகுதிகளில் ஒன்றாக ஜப்பான் விளங்குகிறது.
ரிக்டர் அளவுகோலில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் பதிவாகும் உலகளாவிய நிலநடுக்கங்களில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஜப்பானில் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


