TamilsGuide

முழுப் பக்க விளம்பரத்தில் ஜொலித்தது உரிமைக் குரல்..

இயக்குநர்  ஸ்ரீதர் எப்போதுமே பிடிவாதக்காரர். தான் நினைத்ததை சாதிக்கணும்.ஆனாலும் அந்த நேர நிதி நெருக்கடியில் ஒருவரை தேடிப் போனார்.பெருந்தன்மையோடு வரவேற்றவர் மக்கள் திலகம்.பரபரப்பானது திரைத் துறை.இது வரை ஜோடி சேராத இரு ஜாம்பவான்கள்.முழுப் பக்க விளம்பரத்தில் ஜொலித்தது உரிமைக் குரல்.   பரபரப்பானது படக் குழு..படத்தின் கதையைச் சொல்லி சூழலையும் இயக்குநர் ஸ்ரீதர் சொல்ல மளமளவென பாடலுக்கான தேவை எழுந்தபோது தான் ஒரு விஷயம் புரிந்தது.அரசியலில் எதிரும் புதிருமான எம்.ஜி.ஆரும் கவிஞரும்.  கவிஞர் இல்லாம சித்ராலயா படகு நகராது. ஆரம்பமே அடிதடியா?. பலரும் காதில் ஓத வந்தது வரட்டுமென கவிஞரிடம் ஸ்ரீதர் ஓட சித்ராலயாவில் கவியரசு. அவர்  சொன்ன பல்லவி தான் விழியே கதையெழுது கண்ணீரில் எழுதாதே!.. கதையெழுதிய ஸ்ரீதருக்கு கண்ணீர் வந்ததா?.என்ன பண்றது கவிஞரே?.. உனக்கு பாட்டு புடிச்சுதா?. வாலி எழுதியதுன்னு அவருகிட்டே சொல்லிக்கோ!. நீங்க தந்த இன்னொரு பல்லவியும் நல்லா இருக்கே.அதையும் வாலியை வெச்சே முடிச்சுக்கோ;! 
நூற்றாண்டு விழா காணும் கவியரசை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறோம்.தானே எழுதிய முழுப் பாடலையும் இன்னொருவருக்கு அசால்டாக விட்டுத் தர சம்மதித்த அழகான உள்ளம்.தானே எழுதிய இன்னொரு பல்லவியை தனது சக கவிஞனுக்கு விட்டுத் தந்த தாராள மனசு.இப்போதும் அந்த கல்யாண வளையோசை கொண்டு பாடலின் பல்லவி வாலி பெயரிலேயே வருகிறது.அதற்கு சொந்தக்காரர் கவியரசு என எத்தனை பேருக்குத் தெரியும்?.ஆனால் கவிஞர் எழுதிய இன்னொரு  முழுமையான பாடல் இப்போதும் அந்த மகா கவிஞனின் பெயரைத் தாங்கியே வருகிறது.இன்றைக்கு இந்தப் பாடலை நாம் நினைவு கூறக் காரணம் அந்தப் பாடலின் சூழல் தான்.  செம சிக்கலான சூழல்!.விடிஞ்சா கல்யாணம்.அன்னைக்கு சாயங்காலம் என்ன செய்வது என புரியாமல் கலங்கி நிற்கும் இரு காதலர்கள்.வளரும்போதே கோபிக்கு ராதா தான்னு சொல்லிச் சொல்லியே வளர்த்த காதல்.குடும்பத் தலைவனின் மன மாற்றத்தால் பிரிக்கப்பட்ட காதல் ஜோடி!. இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இந்த ஜோடி ஆற்றங்கரை மணல் திட்டில் தங்களது எதிர் காலத்திற்கான திட்டத்திலிருக்கு.ஆடியன்ஸூக்கு என்ன பண்ணப் போறாங்கன்னு தெரியக் கூடாது.சஸ்பென்ஸா இருக்கணும்.ஆனால் இந்த ஜோடி ஒரு முடிவெடுத்த மாதிரியும் இருக்கணும்.யோசனையில் ஆழ்ந்த கவிஞர் தந்த பல்லவி தான் விழியே கதையெழுது கண்ணீரில் எழுதாதே!..
முழுப் பாடலையும் மெட்டோடு பதிவாக்கி மக்கள் திலகத்திடம் போட்டுக் காட்ட அவர் கேட்ட முதல் கேள்வியே யார் எழுதியது என்பது தான்!. வாலி தாங்க!. சிரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்.இந்த நடைக்குச் சொந்தக்காரர் கண்ணதாசன். எத்தனை வருஷ அனுபவம் தெரியுமா?.தர்ம சங்கடம் ஸ்ரீதருக்கு.ஆமாங்க!. ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதியது.சிச்சுவேஷனுக்கு  கரெக்டா இருந்தது.பாட்டு நல்லா இருக்கு!.. ஸ்ரீதர்!.. ஒண்ணு சொல்றேன்.எங்களுக்குள்ளே ஆயிரம் அரசியல்  கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆனா  சினிமாவில இல்லை!. அந்த பெரிய மனுஷனுக்கு பாடல் பிடித்துப் போனதுக்குக் காரணம் அவ்வளவு நேர்த்தியாக கவிஞர் அந்த  கேரக்டர்களை  உள் வாங்கி இருந்தது

 தான்.நாயகியின் விழி நீரிலிருந்தே பல்லவியைப் பிடித்த கவியரசு.
காதல் கதையெழுதிய கண்களுக்கு கண்ணீர் எதற்கு?. நமக்கான எதிர் காலத்தை நாமே தீர்மானிப்போம். சுற்றம் ஆயிரம் சொல்லட்டும்.சூழல் நமக்கு எதிராக நிற்கட்டும்.இந்த மஞ்சள் வானத்தை சாட்சியாக்கி வீசுகின்ற தென்றலை சாட்சியாக்கி உனது விழி நீரைத் துடைக்க நானிருக்கிறேன்.விசும்பல் எதற்கு என் கண்ணே!..என் உயிரே உனக்காகத் தானே!..அழகாகத் தேற்றும் காதலன்.
விழியே கதையெழுது!.. கண்ணீரில் எழுதாதே!.
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே  நான் வாழ்கிறேன்!..
வழியும் விழி நீரைத் துடைத்துக் கொண்டே ஏதோ ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் இரு காதலர்கள். அந்த மௌன வலிகளுக்கு கவிஞர் தரும் ஒத்தடம் தான் அந்த வார்த்தைகள்.உயிராய் உணர்வாய்  உயர்வாய் நிற்கும் காதலனின்  அதீத அன்புக்குக் கட்டுப்பட்டு நடக்கும் காதலி!. புரிதல் என்பது வார்த்தைகளில் இல்லை!. உணர்தலில் இருக்கிறது!. இவன் எனக்கானவன்.இறுதி வரை என்னோடு பயணிக்கப் போகிறவன் என்கிற உறுதி மொழியை காதலன் உணர்வுகளால் வெளிப்படுத்த வேண்டும்.முகவரி துறந்து  முழு இயல்பைத் துறந்து  கனவுக் கோட்டைக்குள் நுழையும் காதல் ஜோடி! விசும்பல்களை களைந்து நெஞ்சுக்குள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு! அந்த உனக்காகவே நான் வாழ்கிறேன் தந்த தெம்பு!..மனதில் வடித்து வைத்த சிலைகள் எழுந்து  நாட்டியமாக ஆட நினைவுகள் எங்கோ மேகக் கூட்டங்களோடு கலக்க அடர் வனத்தில் கதிரொளிக்கு ஏங்கும் சிறு கொடியாக இங்கே நாயகிக்கு வரிகள் தரும் கவியரசு.
மனதில் வடித்து வைத்த சிலைகள்!.
 அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்!.
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக் கூடும்?..
வண்ணமில்லா மை கொண்டு  கையில்லா மெய் கொண்டு விழி வழியே கவி  எழுதிய வரிகள்!. மேகம் போல ஓடும் எண்ணங்கள்.எல்லையில்லா காதல்  வானத்துக்கு மூடி போடத் துடிக்கும் உறவுகளைச் சாடிய வரிகள்!.இளஞ் சூட்டில் கலந்த தேன் துளியாய்  காதல் இழையோடும் மெல்லிய வரிகள்.முகிழும் காதல் நினைவுகளுக்குள் மூழ்கி எழுகிறது இந்த காதல் ஜோடி. விடிந்தால் வேறொருவனுக்கு மாலையிட வேண்டிய கட்டாயம்.கடவுளெனும் சிற்பி  பார்த்துப் பார்த்து செதுக்கிய சிற்பம்.கண்ணைத் திறக்க வேண்டியது தான் பாக்கி.வெறும் சிற்பம் தெய்வமாக வேண்டிய நேரம்.பூஜைக்கான பாக்கியம் யாருக்கு இருக்கு?. இந்த பூவைச் சூடப் போகும் பாக்கியசாலி யார்?. விடிந்தால் தெரிந்து விடும்.
கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது?. இந்தப்
பூவை யார் கொள்வது?..
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை!..
நுணுக்கமாகச் செதுக்கிய வரிகள்.கோவிலில் பெண்ணாக நிற்கும் சிலை சிற்பி கண்ணைச் செதுக்கினால் தான் அது தெய்வமாகும்.இங்கே யார் சிற்பி என்பது தான் பிரச்சனை! ஒரு மலருக்காக இரு வண்டுகள் மோதிக் கொள்கின்றன.பூஜைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கு.பூவைக்கோ இங்கே தவிப்பு! .கவலையே படாதே!.. கலக்கமே வேண்டாம்! . விழி நீரைத் துடைத்து உனது கனவுகளை நனவாக்க நானாச்சு! உனக்காக காத்துக் கிடக்கிறது நாளைய இரவு! ஈரக் காற்று இதழ் தடவிச் செல்லும் நாழிகைக்காக நானும் காத்திருப்பேன் என் கண்ணே!.. இப்போதே மங்கள நாதம் காதில்  கேட்கிறது.மனக் கண்ணில் தீபத்தின் ஒளி இதோ  தெரிகிறது.உன்னை ஒளியால் நிறைக்கிறேன். உனது உணர்வோடு கலக்கிறேன்.உன்னையும்  உயிராக மதிக்கிறேன்.அத்தனையும் நீ தந்த மாற்றம் தான்.இது முன் ஜென்ம பந்தம் முடிவிலாச் சொந்தம்.கவிஞரின் இறுதிச் சரணம் ஒரு முடிவோடு வருகிறது.
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது!.
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது!.
எண்ணத்தில் என்னென்ன தோற்றம்! என்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்!.
உனக்காகவே நான் வாழ்கிறேன்!..
கதையெழுதிய விழிகளை கலக்கலாகத் தந்த கவியரசு.தூறல் மறந்த வெற்று வானத்தின் நிதர்சனத்தில் தொடங்கிய பாடல்.போகப் போக சிறு தூறலாய்  மின்னல் ஒளியில் வெள்ளிக் கீற்றுகளாக விழுந்த வார்த்தைகளில் அடர் வனத்தின் பசுமை அப்படியே வந்து நம்மை  அப்பிக் கொள்கிறது.வரிகளின் நிதர்சனத்தில் மூழ்கியெழுந்த மெல்லிசை மன்னர்.எவ்வளவு இனிமையாக்கணுமோ அவ்வளவு இனிமையாக்கிய பாடல்.  சோகமே தெரியாத ஒரு சுகமான அனுபவம்.வயலின் ஃப்ளூட் பியானோ மணிகளில் அப்படியே அள்ளிக் கொண்டு போகுது அந்த கனவுக் காட்சிகள்.தங்கமென மின்னும் இரு காதல் ஜோடி.  கண் கொட்டாமல் பார்த்து மகிழ்ந்த திரை ரசிகன்.அவர்களுக்கான ஆடை அணிகலன்களில் ஒரு நேர்த்தி.இது வரை கனவுக் காட்சிகளில் பயணிக்காத ஸ்ரீதருக்கே ஒரு புதுமையான அனுபவம்.மக்கள் திலகத்தை எதிர்பார்த்து வரும் ரசிகனை ஏமாற்றக் கூடாது..காரணம் அவன் தான் ஸ்ரீதரின் பேங்க் பேலன்ஸை எகிற வைக்க் கூடியவன். எகிற வைத்தான் என்கிறது திரை வரலாறு.கவிஞரின் வரிகளை அழகாக உள்வாங்கிய அருமையான இரு குரல்கள். அசத்தலான ஜேஸேட்டன் இசையரசி ஜோடி. சரணத்தின் இறுதி வரிகளில் அவர்கள் காட்டிய இன்வால்வ்மெண்ட்.வானத்தை யார் மூடக் கூ...டும். உள்ளத்தில் ஏதேதோ ஆ....சை... எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எழிலான பாடல். பிறந்த நாள் கொண்டாடும் இரு மேதைகளுக்காக இந்தப் பாடல் எப்போதும் நம் நெஞ்சில் நிழலாடும் அருமையான பாடல்!..

 

Abdul Samath Fayaz

Leave a comment

Comment