வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நீரேந்து பிரதேசமாக காணப்படும் பகுதிகளில் கம்பி கட்டைகள் இறுக்கி காணிகள் விற்பனை என விளம்பரப்படுத்தப்படுகிறது. பல இடங்கள் கட்டட இடிபாடுகள் கொண்டு மூடப்படுகிறது.
இவையெல்லாம் எங்கோ ஊர்மனைக்குள் நடக்கவில்லை. அதிகாரிகள் அரசியல்வாதிகள் என பல தரப்பட்ட தரப்பினரும் தினமும் சென்று வரும் பிரதான வீதியோரமாக இவை நடைபெறுகிறது.
இவ்வாறான நிலையில் தான் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அரச காணிகளின் விபரங்கள் தொடர்பில் மாவட்ட செயலகத்திடம் கேட்ட போது, தமது கோப்புக்களில் அந்த விபரங்கள் இல்லை எனவும் அவற்றை பிரதேச செயலகங்கள் ஊடாக கேட்டு பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்தனர்.
பிரதேச செயலகத்திடமாவது இருக்குமா என கேட்ட போது, அதுவும் சந்தேகம் தான். எங்கே எங்கே காணி இருக்கு என்ற தகவல் வேணும் என்றால் இருக்கலாம் ஆனால் இதில் எவ்வளவு காணி என்ற அளவு பிரமாணங்களுடன் , ஆவண ரீதியாக தகவல் இருக்குமா என தெரியலை எதற்கும் பிரதேச செயலக ரீதியாக கேட்டு பாருங்கள் என பதில் தந்தார்கள்.
இவ்வாறான காணிகளை அடையாளம் காணும் சில மாஃபியாக்கள் பிரசித்த நொத்தாரிசுகள் மற்றும் சட்டத்தரணிகளின் ஆசீர்வாதங்களுடன் காணிகளை வெளிப்படுத்தல் மூலம் ஆட்டையை போட்டு விடுவாங்க.
அதற்கு அண்மைய உதாரணம் , யாழ்.நகர் பகுதியில் , மாநகர சபையின் காணியை ஒருத்தன் ஆட்டையை போட்டு , அதே மாநகர சபையில் தன் காணி என சோலைவரியும் கட்டி இருக்கிறான். இப்ப தான் இவை அது மாநகர சபை காணி என ஓடி பிடிச்சு இருக்கிறார்கள்.
அதேபோன்று வலி. வடக்கு பிரதேசத்தில் மக்கள் இடம்பெயர்ந்து 35 வருடங்களின் பின்னர் தமது காணிகளுக்கு செல்லும் போது உறுதிகள் இல்லாது தவறவிடப்பட்டு இருக்கும். சிலருக்கு காணிகள் எங்கே இருக்கிறது என்ற அடையாளம் தெரியாமல் இருக்கலாம். வெளிநாட்டில் மற்றும் வெளி மாகாணங்களில் உள்ளவர்களுக்கு காணிகள் அடையாளம் தெரியாமல் இருக்கலாம்.
அவ்வாறான காணிகளை ஊரில் உள்ள பெரிய மனுஷர்கள் சிலர் அடையாளம் கண்டு காணிக்கு கல்லு குத்தி வைச்சு இருக்கிறாங்க.
சிலர் சைலண்டா வெளிப்படுத்தல் முடிச்சு , காத்திருக்கிறாங்க.
இன்னும் சிலர் வெளிப்படுத்தலே முடிக்காமல் , காணிக்குள் வாழை நட்டு , லைட்டா தங்கள் ஆட்சி உரிமையை நிலை நாட்டுகிறாங்க. ஏதாவது வீட்டு திட்டம் , கட்டுமானம் என பிரதேச சபை , பிரதேச செயலகம் சென்றாலே உறுதியை கொண்டு வா என கேட்பாங்க,
மற்றம்படி காணிக்குள் வாழை நட்டு தண்ணீர் ஊற்றினால் எவனும் கேட்கான், உண்மையான காணி காரன் எங்காவது இருந்து வந்தால் , உன்கிட்ட உறுதி இருக்கா ஆவணம் இருக்கா என அவனை வெருட்டுறது. அவன் ஓம் என காட்டினால் , ஆ ஓகே என நைசா கழண்டு போடுவாங்க. அங்கே காணி பிடிக்க முற்பட்டவனுக்கு ஏற்பட்ட நஷ்டம் அவன் நட்ட அந்த 10 வாழைக்கான செலவு தான்
அப்படி ஆவணம் இல்லாமல் காணிக்காரன் வந்தால் அவனை மிரட்டி அனுப்புறது. காணிக்காரன் வராட்டி , 2 வருஷம் வாழை நட்டவன் , மூன்றாவது வருஷம் கொட்டில் போட்டு மாடு கட்டுவான். ஐந்தாவது வருடம் வெளிப்படுத்தல் உறுதி முடிப்பான். 06 வருடம் காணிக்கு நிரந்தர கரண்ட் எடுப்பான். 07ஆவது 08 வருடத்துக்குள் தன்ரை காணி என எல்லா அலுவலும் முடிச்சு விடுவான்.
அதே போன்று அரச காணிகளை ஆட்டையை போட்டு வெளிப்படுத்தல் முடித்தாலும் , அரச அதிகாரிகள் இது அரச காணி என ஒரு கட்டத்தில் ஓடி பிடிச்சாலும் , உடனே அவனிடம் போய் காணியை விடு என பறிக்க முடியாது.
அந்த வெளிப்படுத்தல் உறுதியை நீக்கு என பதிவாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பி, அந்த உறுதியை வறிதாக்க முடியாது.
மாவட்ட நீதிமன்றில் வழக்கு போட்டு , அது அரச காணி என நிரூபிக்க வேண்டும். அப்படி அவனுக்கு எதிராக வந்தாலும் அவன் மேல் முறையீட்டுக்கு போவான். அந்த நீண்ட வருட கால பகுதிக்குள் மாறி மாறி வரும் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளில் எவனாவது ஒருத்தன் மனசு வைச்சு அந்த காணியை நிரந்தரமாக்கி கொடுத்து விடுவாங்க,
தற்போது வடக்கில் காணி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் என சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக 09 பிரசித்த நொத்தாரிசுகள் பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (இதில் எத்தனை பேர் போலீசாருடன் நல்லுறவில் உள்ளார்கள் என்பது வேற கதை)
அதேவேளை 2023ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு மே மாதம் வரையில் காணி மோசடிகள் தொடர்பில் 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , 47 வழக்குகள் முடிவடைந்துள்ள நிலையில் , 29 வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.
"போலி உறுதிகளை எழுதுவதற்குப் பதிவாளர் திணைக்களத்திலுள்ள சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்து, காணிகளின் மூல ஆவணங்களான தோம்புகளை அழித்திருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மையாகும்" என வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் 'கடந்த ஆட்சியின் போது காணி மோசடிகளுடன் தொடர்புடைய சட்டத்தரணிகளைக் கைது செய்வதற்குப் பொலிஸார் சட்டமா அதிபரின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடான வழிகாட்டல் வழங்கப்பட்டிருந்தது. இவ்விடயத்தை நான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, தற்போது அந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Sriramachandaran Mayutharan


