TamilsGuide

மியான்மார் இணைய மோசடி - ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் சிறைபிடிப்பு

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு பல நாடுகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்ட போதிலும், இந்த மோசடி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மனித கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் சிவில் சமூக வலைப்பின்னல் அமைப்பு தாய்லாந்து பொலிஸாரிடம் கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ளது.

மியான்மார் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பகுதிகளில் அமைந்துள்ள இந்த மையங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிப்பீடுகளின்படி அங்கு சுமார் 1,600 சீனர்கள், 200 மியான்மார் குடிமக்கள் மற்றும் 20 தாய்லாந்து நாட்டவர்கள் உள்ளனர். மேலும் பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா, பிரேசில், ரஷ்யா, கென்யா, உகாண்டா, ருவாண்டா மற்றும் சிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, மியான்மார் மற்றும் கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இயங்கி வரும் இந்த குற்றவியல் வலையமைப்புகள் இணைய மோசடிகள் மூலம் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்து வருகின்றன.

மனித கடத்தலின் மூலம் இந்த மையங்களுக்கு அழைத்துவரப்படும் வெளிநாட்டவர்கள், கடுமையான அழுத்தங்களின் கீழ் வலுக்கட்டாயமாக நிதி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தாய்லாந்தின் தலையீட்டுடன் மியான்மாரின் மியாவாடி பகுதியில் இருந்து சுமார் 5,000 பேர் மீட்கப்பட்ட போதிலும், மோசடி மையங்கள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.

எனினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக டி.கே.பி.ஏ. ஆயுதக் குழுவோ அல்லது மியான்மார் இராணுவ ஆட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர்களோ இதுவரை எந்தவித பதிலும் வழங்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 

Leave a comment

Comment