ஹங்கேரியின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பீட்டர் மக்யார் (Péter Magyar), நாட்டில் கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் நிதி மோசடிகளை ஒழிக்கும் நோக்கில் விரிவான சட்டத்திருத்தங்களை முன்மொழிந்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, முன்னாள் பிரதமர் விக்டர் அர்பனின் (Viktor Orbán) ஆதரவாளராகக் கருதப்படும் தற்போதைய ஜனாதிபதி தமாஸ் சுல்யோக்கை (Tamás Sulyok) பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரம் ஊழல் காரணமாக சுமார் 10 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர், அதனை கட்டுப்படுத்த 47 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள முன்வந்துள்ளார்.
மேலும், ஊழல் மற்றும் அரசுச் சொத்து முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் “தேசிய சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு அலுவலகம்” என்ற புதிய அமைப்பை உருவாக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
நீதித்துறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் வகையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 70 ஆக உயர்த்தவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தை 12 ஆண்டுகளாக வரையறுக்கவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
புதிய பிரதமரின் இந்த அதிரடி அரசியல் மற்றும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் ஹங்கேரி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.


