TamilsGuide

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசர் முஸ்தபாவால் முன்மொழியப்பட்ட இந்த சட்டமூலம், சமூக ஊடகங்கள் மற்றும் இணையச் சேவை வழங்குநர்களுக்கான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதோடு, சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஆளாவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின் கீழ் இலங்கையில் இயங்கும் சமூக ஊடகச் சேவை நிறுநவனங்கள், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தளங்களை அணுகுவதைத் தடுக்கவும், வயது வரம்புக்கு உட்பட்ட பயனர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவும் வேண்டியிருக்கலாம்.

அத்துடன், சிறுவர்கள் குறிப்பிட்ட இணையச் சேவைகளைப் பயன்படுத்தும் கால அளவு மற்றும் அவற்றை அணுகக்கூடிய நேரங்கள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளையும் இச்சட்டமூலம் அனுமதிக்கிறது.

இணையச் சேவை வழங்குநர்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் இந்தக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் விதிமுறைகளை அறிமுகப்படுத்த, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு இம்முன்மொழிவு அதிகாரம் அளிக்கிறது.

இச்சட்டமூலம், இச்சட்டத்தின் விதிகளைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்கவும், முறைப்பாடுகளை பெறவும், விசாரணைகளை நடத்தவும் மற்றும் சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்தவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆணையாளரை நியமிப்பதற்கான ஏற்பாட்டையும் கொண்டுள்ளது.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், இலங்கைக்குள் உள்ள பயனர்களுக்குச் சேவைகளை வழங்கும் குறிப்பிட்ட சமூக ஊடகச் சேவை வழங்குநர்களுக்கு இது பொருந்தும். 
 

Leave a comment

Comment