நடிகர் வி.சி.கணேசனுக்கு 'சிவாஜி' என்கிற அடைமொழி கிடைத்ததற்கு எம்.ஜி.ஆர்தான் காரணமாக இருந்தார்....
சினிமா
கணேசமூர்த்தி என்கிற இயற்பெயரைக் கொண்ட நடிகர் வி.சி.கணேசனுக்கு 'சிவாஜி' என்கிற அடைமொழி கிடைத்ததற்கு ஒருவகையில் எம்.ஜி.ஆர்தான் காரணமாக இருந்தார் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.
இளம் வயதில் பல்வேறு நாடகக்குழுக்களில் நடித்து திறமையான நடிகராக வி.சி.கணேசன் அறியப்பட்டிருந்தார். இந்தச் சமயத்தில் பெரும்பாலும் பெண் வேடத்தில் நடித்து புகழ்பெற்றிருந்தார் என்பதை கடந்த வாரங்களில் பார்த்தோம். சில காரணங்களால் கணேசன் சார்ந்திருந்த நாடக சபாக்கள் வீழ்ச்சியடைந்தன. இது கணேசனையும் பாதித்தது. எனவே அவர் காஞ்சிபுரத்திற்குச் சென்று அறிஞர் அண்ணாவிடம் பத்திரிகை தொழிலில் உதவியாளராக இருந்தார். அந்தச் சமயத்தில் திராவிடர் கழகத்தின் சுயமரியாதை மாநாட்டிற்காக, அண்ணா எழுதிக் கொண்டிருந்த நாடகம்தான் 'சிவாஜி கண்ட இந்து
இதில் மாமன்னர் சத்ரபதி சிவாஜியாக நடிப்பதற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவர் எம்.ஜி.ஆர். அப்போது அவர் வளரும் நடிகராகவும் பொலிவான தோற்றத்தைக் கொண்டிருந்ததாலும் 'மாமன்னர்' வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால், அண்ணா எழுதிய அந்த நாடகத்தில் சில மாற்றங்களைச் செய்ய எம்.ஜி.ஆர் விரும்பினார். மாமன்னர் சிவாஜிக்கு பட்டம் சூட்டப்படும் போது குலம் சார்ந்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. இந்த விஷயம் தொடர்பாக தனது நாடகத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஆவேசமான வசனங்களை எழுதியிருந்தார் அண்ணா. இந்த வசனங்களை, மன்னர் தனது தளபதியிடம் சொல்வதாக நாடகம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதை மக்களிடம் நேரடியாகச் சொல்வது போல் நாடகம் அமைந்திருந்தால் நன்றாக இருக்குமே என்பது எம்.ஜி.ஆரின் யோசனை. ஆனால், அத்தனை பெரிய எழுத்தாளரான அண்ணாவிடம் இதைச் சொன்னால் சரியாக இருக்குமா என்கிற தயக்கம் எம்.ஜி.ஆரிடம் ஏற்பட்டது. இது சார்ந்து எழுந்த குழப்பத்தினால் எம்.ஜி.ஆர் விலகிக் கொள்ள, ‘'வேறு யாரை நடிக்க வைக்கலாம்'’ என்று கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட அப்போதைய பிரபலமான நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், நாடகங்களில் நடித்து சிறப்பான பெயர் வாங்கியிருந்த கணேசனை நடிக்க வைக்கலாம் என்கிற முடிவை அண்ணாவே அழுத்தமாக முன்மொழிந்தார். இதற்கொரு காரணமும் உண்டு.
காலை பதினோரு மணிக்கு அண்ணாவிடமிருந்து நாடகத் தாள்களை வாங்கிய கணேசன், அன்றைய தினமே அதை மனப்பாடம் செய்து மாலை அண்ணா வரும் போது ஏற்ற இறக்கங்களுடன் முழுக்காட்சிகளையும் 'கணீர்' என்ற குரலில் வசனமாக பேசிக் காண்பித்திருக்கிறார். கணேசனின் திறமையையும் அர்ப்பணிப்பையும் கண்டு கொண்ட அண்ணாவிற்கு கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் விலகிப் போனது. சிவாஜியின் ஒல்லியான முகத்தோற்றத்தை மறைக்க தாடி வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆருக்காக தைக்கப்பட்டிருந்த உடைகள் சிவாஜிக்கேற்ப சரி செய்யப்பட்டன.
மாமன்னர் சத்ரபதி சிவாஜி எனும் இத்தனை பெரிய பாத்திரத்தில் தன்னால் நடிக்க முடியுமா என்று தயங்கிய கணேசனை, அண்ணா உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். நாடகம் பெருவெற்றி பெற்றது. காகபட்டர் என்கிற வேடத்தில் அண்ணாவும் நடித்திருந்தார். இந்த நாடகத்திற்கு தலைமை தாங்கி சிறப்பு விருந்தினராக வந்திருந்த பெரியார் "சிவாஜியா நடிச்சிருந்த பையன் நல்லா நடிச்சிருந்தான்" என்று பாராட்ட, கணேசன் என்கிற அந்த இளைஞனை மேடைக்கு அழைத்து வந்தனர். '’இனிமே நீ வெறும் கணேசன் இல்ல. 'சிவாஜி’ கணேசன்’’ என்று பெரியார் அன்று தந்த பட்டம்தான் பிறகு கணேசமூர்த்தி என்கிற அந்த இளம் நடிகன், தன் வாழ்நாள் முழுவதும் பெருமிதத்துடன் சூட்டிக் கொள்ளும் அடையாளமாக மாறிப் போனது.
ஒருவேளை, ஏற்கெனவே செய்திருந்த முடிவுகளின் படி எம்.ஜி.ஆரே இந்த நாடகத்தில் நடித்திருந்தால் என்னவாகியிருக்கும்? சிவாஜியின் வெற்றி சற்று தாமதமாகியிருக்கலாமே தவிர, அவரின் பிரமாண்டமான வருகையை யாராலும் தடுத்திருக்க முடியாது. 'பராசக்தி' திரைப்படத்தில் நடிப்பதற்கு சிவாஜியின் தோற்றம் காரணமாக எதிர்ப்பும் தயக்கமும் ஏற்பட்ட சம்பவங்களை முன்னர் பார்த்தோம். 'பராசக்தி' இல்லையென்றாலும் கூட இன்னொரு சந்தர்ப்பத்தின் மூலம் இந்த விதை விருட்சமாக வளர்ந்திருக்கும் என்பது போல் சிவாஜியைப் பாராட்டியவர் வேறு யாருமல்ல. அறிஞர் அண்ணாவேதான்.
- பிரசாந்த்!





















