TamilsGuide

திருகோணமலை MP ரொஷான் அக்மீமன மத்திய பேருந்து நிலையத்திற்கு களவிஜயம்

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கண்டறிவதற்காக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த கண்காணிப்பு விஜயத்தில் திருகோணமலை மாநகர சபை, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் சீரற்ற கழிவகற்றல் முறைமை மற்றும் அதன் தூய்மை அற்ற நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மாநகர சபை மீது தனது அதிருப்தியை வெளியிட்டார்.

இதன்போது, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் கித்சிறி நவரத்ன மற்றும் திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் கே. செல்வராசா ஆகியோருக்கு இடையே காரசாரமான வாக்குவாதமும் ஏற்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதன் தூய்மையைப் பேணுவது குறித்து திருகோணமலை மாநகர சபைக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதாகக் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment