ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ செய்தி போன்ற வடிவில், வாட்ஸ்அப் செயலி ஊடாகப் பரவி வரும் அதிநவீன மற்றும் நுணுக்கமான நிதி மோசடி குறித்து பொதுமக்கள் உடனடியாக அதீத அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசரப் பதிலளிப்புப் பிரிவு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த மோசடியானது மிகவும் சட்டப்பூர்வமான மற்றும் உத்தியோகபூர்வமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், எவர் வேண்டுமானாலும் இதில் மிக எளிதாக ஏமாந்துபோகும் கடுமையான அபாயம் உள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
மோசடி செய்பவர்கள், ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் அனுப்பப்படுவது போன்று போலியாகத் தயாரிக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்தியொன்றைப் பொதுமக்களுக்கு அனுப்புகின்றனர்.
அந்தச் செய்தியில் ,
இச்செய்தியைப் பெறுபவரின் முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை எண் (NIC Number) மற்றும் வீட்டு முகவரி ஆகியவை துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், எவருக்கும் ஆரம்பத்தில் சந்தேகம் எழுவதில்லை.
“ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தின்படி, உங்களது தேசிய அடையாள அட்டை விபரங்களைப் புதுப்பிப்பதற்கும் சரிபார்ப்பதற்கும் நீங்கள் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறீர்கள்” எனக் குறிப்பிட்டு, அதற்காக வர வேண்டிய திகதி, நேரம், இடம், எடுத்து வர வேண்டிய அசல் ஆவணங்கள் மற்றும் கைரேகை சரிபார்ப்பு போன்ற விபரங்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
பொதுமக்களை உடனடியாகத் தங்களை நோக்கி அழைக்க வைப்பதற்காக இந்தச் செய்தியின் இறுதியில் மோசடி செய்பவர்கள் பின்வரும் முக்கியமான எச்சரிக்கையையும் சேர்த்துள்ளனர்.
“இந்தச் சரிபார்ப்புச் செயல்பாட்டில் கலந்துகொள்ளத் தவறினால், உங்களது தேசிய அடையாள அட்டையுடன் தொடர்புடைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் . நீங்கள் திகதியை மாற்றியமைக்க விரும்பினால், குறைந்தது 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் எங்களது உதவி மைய எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.”
பெரும்பாலான மக்களுக்கு இந்தச் செய்தி குறிப்பிட்ட திகதிக்குச் சற்று முன்னரே கிடைப்பதால், தங்களது அடையாள அட்டை முடக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் உடனடியாக அதில் உள்ள போலி தொலைபேசி எண்ணிற்கு அழைக்கின்றனர்.
அதன் பின்னர், மறுமுனையில் பேசும் மோசடிக்காரர்கள் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் நிரப்புவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் வங்கி விபரங்கள் மற்றும் மொபைல் போனுக்கு வரும் OTP உள்ளிட்ட ரகசியக் குறியீடுகளைப் பெற்று, அவர்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை நுணுக்கமாகத் திருடி விடுகின்றனர்.
இது குறித்து விசேட அறிக்கை விடுத்துள்ள ஸ்ரீலங்கா CERT நிறுவனம்,”ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாட்ஸ்அப் மூலம் விபரங்களைச் சரிபார்ப்பதில்லை”என்பதைத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
எனவே, இவ்வாறான போலியான செய்திகளில் உள்ள இணையதள முகவரிகளுக்குள் செல்வதையோ அல்லது அதில் உள்ள தொலைபேசி எண்களுக்கு அழைப்பதையோ முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறும், தங்களது தனிப்பட்ட இரகசிய வங்கி விபரங்கள் அல்லது OTP குறியீடுகளை எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் எக்காரணம் கொண்டும் வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


