பிரான்சின் துலூஸ் நகரிலுள்ள ரங்குய் வைத்தியசாலையில் இடம்பெற்ற வினோத சம்பவம் ஒன்று சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், அவரது உடலுக்குள் முதல் உலகப் போர்காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் பீரங்கி குண்டு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எக்ஸ்-ரே பரிசோதனையின் போது குறித்த பொருள் கண்டறியப்பட்டதையடுத்து, அது வெடிக்கக்கூடிய ஆபத்தான வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி, வைத்தியசாலையின் ஒரு பகுதி தற்காலிகமாக காலி செய்யப்பட்டதுடன், தீயணைப்பு படையினர், காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், குறித்த பீரங்கி குண்டில் செயலில் உள்ள வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குறித்த பொருளை பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் இளைஞரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களிலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.


