TamilsGuide

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வரலாற்று சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குழு J ஆட்டத்தில் ஆஸ்திரியாவுக்கு எதிராக களமிறங்கிய அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, ஆரம்பத்தில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட போதிலும் பின்னர் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

டெக்சாஸ் மாநிலத்தின் ஆர்லிங்டனில் நடைபெற்ற போட்டியின் 9ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி கோலாக மாற்றத் தவறினார். பந்து கோல் கம்பத்தை விட்டு வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

லியோனல் மெஸ்ஸி

எனினும், அதனால் மனம் தளராத 38 வயதான மெஸ்சி, 38ஆவது நிமிடத்தில் அணியின் சிறப்பான ஒருங்கிணைந்த தாக்குதலை கோலாக மாற்றி உலகக் கிண்ண ஆடவர் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக உயர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் ஜெர்மனியின் முன்னாள் வீரர் Miroslav Klose-வின் 16 கோல்கள் என்ற சாதனையை முறியடித்து, உலகக் கிண்ண வரலாற்றில் 17 கோல்கள் அடித்த முதல் வீரராக மெஸ்சி சாதனை படைத்துள்ளார்.

மேலும், இது மெஸ்சியின் தொடர்ச்சியான ஆறாவது உலகக் கிண்ணப் போட்டியில் பதிவு செய்த கோலாகவும் அமைந்துள்ளது.

வரலாற்று சாதனை

அதோடு, தனது ஆறாவது உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் அவர், மொத்தம் 28 உலகக் கிண்ணப் போட்டிகளில் களமிறங்கி புதிய சாதனையையும் தனதாக்கியுள்ளார்.

இதற்கு முன்பு அல்ஜீரியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்திருந்த மெஸ்சி, தற்போது 2026 உலகக் கிண்ணத்தில் கோல் அடித்த வீரர்களில் முன்னணியில் உள்ளார்.

"அவரும் மனிதர்தான்" என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தாலும், பெனால்டி தவறிய சில நிமிடங்களிலேயே வரலாற்றை மீண்டும் எழுதியதன் மூலம் தனது மகத்துவத்தை மெஸ்சி நிரூபித்துள்ளார்.
 

Leave a comment

Comment