வவுனியா நகரில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் நடத்தப்பட்ட அனுமதியற்ற வாகனப் பேரணி ஒன்றின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (22) குறித்த பாடசாலை மாணவர்களால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் பெரும் எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களுடன் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
பெரும் போக்குவரத்து
இதன்போது, மாணவர்கள் கூட்டமாக வீதியை மறித்து, ஏனைய வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் போக்குவரத்து இடையூறை ஏற்படுத்தும் வகையில் பயணித்துள்ளனர்.
அத்துடன், அதிவேக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய வகையில் 'சைலன்சர்கள்' பொருத்தப்பட்டிருந்ததோடு, வீதியில் ஆபத்தான முறையில் அதிவேகமாகவும் அவர்கள் வாகனங்களை செலுத்தியுள்ளனர்.
இது குறித்துக் கிடைத்த தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குறித்த பேரணியை வழிமறித்தனர்.
வழக்குத் தாக்கல்
இதன்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் போக்குவரத்து இடையூறு விளைவித்தல் (பொது வீதியில் ஏனைய வாகனங்கள் பயணிக்க முடியாதவாறு இடையூறு ஏற்படுத்தியமை), சட்டவிரோத மாற்றம் (வாகனங்களின் அசல் வடிவமைப்பு அனுமதியின்றி மாற்றியமைத்தமை ), ஒலி மாசு ஏற்படுத்தல் (மோட்டார் சைக்கிள்களின் ஒலி அமைப்பை மாற்றி அதிக சத்தத்தை எழுப்பியமை), வேகமாக பயணித்தமை (பொது வீதியில் ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்தியமை) தொடர்பிலான சட்டங்களின் கீழ் மாணவர்களுக்கு எதிராக பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது: இந்த சோதனையின் போது, விதிமுறைகளை அப்பட்டமாக மீறிய குற்றச்சாட்டில் ஒரு மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு, வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பல மாணவர்களுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மாணவர்கள் இவ்வாறான கொண்டாட்டங்களின் போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதையும், வீதிப் பாதுகாப்புச் சட்டங்களை மீறுவதையும் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த பாடசாலையில் இம்முறை பரீட்சைக்கு தோற்றும் உயர்தர மாணவர்களின் ஒன்று கூடல் இடம்பெற்ற நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


