பொது சுகாதார பரிசோதகர்கள் (PHIs) போல நடித்து மோசடியாகப் பணம் பறிக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக, இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனியார் வீடுகளில் உள்ளவர்களைத் தவறாக வழிநடத்தி, சட்டவிரோதமாகப் பணம் வசூலித்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்தச் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போதைய டெங்கு பரவல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுடன் இச்சம்பவங்கள் பெரும்பாலும் தொடர்புடையவை என்று அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வீடுகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் பணம் கேட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது சுகாதார பரிசோகர்கள் தங்கள் உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்யும்போது எந்தவொரு சூழ்நிலையிலும் பணம் கோருவதோ அல்லது வசூலிப்பதோ இல்லை என்பதை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதற்கிணங்க, பொது சுகாதார பரிசோதகர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கோ அல்லது அப்பதவியின் கீழ் செயல்படுபவர்களுக்கோ எவ்விதப் பணத்தையும் வழங்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், யாரேனும் ஒருவர் தங்களை பொது சுகாதார பரிசோதகர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு, உத்தியோகபூர்வ கடமைகள் தொடர்பாகப் பணம் கோரினால், அது குறித்து உடனடியாகக் பொலிஸாரிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் முறையிட வேண்டும் என்றும் அச்சங்கம் அறிவுறுத்தியுள்ளது.


