TamilsGuide

கனடாவில் மின்சார ஸ்கூட்டர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மின்சார ஸ்கூட்டர்களை (E-scooters) பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிருக்கே ஆபத்தாக முடியும் காயங்கள் குறித்து கனடாவின் இரண்டு முன்னணி குழந்தைகள் மருத்துவமனைகள் அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளன.

மின்சார ஸ்கூட்டர் என்பது ஒரு விளையாட்டுப் பொருள் அல்ல; அதை மக்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என மொண்ட்ரியால் குழந்தைகள் மருத்துவமனையின் விபத்து தடுப்புப் பிரிவு இயக்குனர் டெபி ஃப்ரைட்மேன் தெரிவித்துள்ளார்.

மேலும், "மூளை பாதிப்பு, முகத்தில் கடுமையான காயங்கள், வயிற்றுப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் எலும்பு முறிவுகளுடன் பல குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்படுகிறார்கள்.இவை மிகவும் தீவிரமான காயங்கள் என அவர் எச்சரித்துள்ளார்.

இதேபோன்றதொரு எச்சரிக்கையை பிசி குழந்தைகள் மருத்துவமனையும் விடுத்துள்ளது. அங்கு மின்சார ஸ்கூட்டர் விபத்துகளால் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகளில் பெரும்பாலானோர் 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கியூபெக் மாகாணத்தில் 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு. ஏனைய பெரும்பாலான மாகாணங்களில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த வயதை விடக் குறைவான சிறுவர்களே அதிகளவில் விபத்துக்குள்ளாகி அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வருகின்றனர்.

விபத்துக்குள்ளானவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை; 59 சதவீதத்தினர் அனுமதிக்கப்பட்ட 25 கிலோ மீற்றர் வேக வரம்பை விட அதிவேகமாகச் சென்று விபத்தில் சிக்குகின்றனர் என பிரிட்டிஷ் கொலம்பிய குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர் ஷெலினா பாபுல் தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment