TamilsGuide

சுவிட்சர்லாந்தில் முதல் சுற்று பேச்சுவார்த்தை - வெளிநடப்பு செய்த ஈரான் பிரதிநிதிகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான 14 அம்ச ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தின் பர்ஜென்ஸ்டாக் நகரில் நேற்று நடைபெற்றது.

பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையில், அதிபர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அடங்கிய குழு இதில் பங்கேற்றது.

ஈரான் சார்வில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரும், கத்தார் பிரதமரும் சுவிட்சர்லாந்திற்கு நேரில் வருகை தந்தனர்.

இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "லெபனானில் ஈரானால் பணம் கொடுத்து இயக்கப்படும் ஹிஸ்புல்லா உடனடியாக வன்முறையை நிறுத்த வேண்டும். இல்லையெனில் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்" என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானியப் பிரதிநிதிகள் அரங்கில் இருந்து வெளியேறியதாக ஈரானின் செய்தி நிறுவனமான IRNA செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப்,

"அமெரிக்கா தனது அறிக்கைகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எங்களது ஆயுதப் படைகள் பதிலளிக்கத் தயாராக உள்ளன. அவர்கள் என்ன சொன்னாலும், அதைச் செயலில் காட்டுபவர்கள் நாங்கள் தான்" என்று எச்சரித்துள்ளார்.

ஈரான் குழு தற்காலிகமாக வெளிநடப்பு செய்தாலும், பின்னர் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்ததாக அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்றைய முதல் சுற்று பேச்சுவார்த்தையில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜே.டி. வான்ஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த வெள்ளியன்று லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் தற்காலிகமாகப் பேச்சுவார்த்தை பாதிக்கப்பட்டது.

ஒப்பந்தத்தின் விதிகளை அமெரிக்கா முழுமையாக நிறைவேற்றத் தவறினால், இந்த ஒட்டுமொத்த உடன்படிக்கையும் முறிந்துவிடும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்தது.

ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்ககா மறுத்துள்ளது. சனிக்கிழமையன்று மட்டும் 55 வணிகக் கப்பல்கள் எவ்விதத் தடையுமின்றி இப்பாதையைக் கடந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment