ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியொன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் எட்டு மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கிட்டா வார்டு கல்வி வாரியத்தின் தகவலின்படி, பள்ளிக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் அமைந்திருந்த இசை வகுப்பறையில் முதலில் தீ பரவியதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளியில் இருந்த மாணவர்கள் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள பூங்காவிற்கு அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சில மாணவர்கள் பின்னர் தங்களது பெற்றோருடன் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 74 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர சேவை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் பள்ளி வளாகத்தில் சுமார் 360 மாணவர்களும் ஆசிரியர்களும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் டோக்கியோ பெருநகர காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


