TamilsGuide

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கொங்கோ அணியில் தமிழ் வம்சாவளி வீரர்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கொங்கோ அணிக்காக ஸ்டார்டிங் லெவனில் களமிறங்கி தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த வீரர் சாமுவேல் முத்துசாமி கவனத்தை ஈர்த்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹியூஸ்டனில் நடைபெற்ற ‘கே’ பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் கொங்கோ அணிகள் மோதின. போட்டி தொடங்கிய ஆறாவது நிமிடத்தில் போர்ச்சுகலின் ஜோவா நெவாஸ் முதல் கோலை பதிவு செய்தார்.

அதற்கு பதிலடி கொடுத்த கொங்கோ அணி, முதல் பாதி நிறைவதற்கு முன் விஸ்ஸா அடித்த கோலின் மூலம் ஆட்டத்தை சமநிலைப்படுத்தியது. இறுதியில் ஆட்டம் 1–1 என்ற கணக்கில் ட்ராவில் முடிந்தது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தில் காங்கோ அணிக்காக தொடக்க அணியில் இடம்பெற்றிருந்தவர் 29 வயதான நடுகள வீரர் சாமுவேல் முத்துசாமி. இவர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தவர்.

இவரது தாய் கொங்கோ நாட்டைச் சேர்ந்தவர். தந்தை கரீபியன் தீவுகளில் ஒன்றான குவாதலூப்பை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியினர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்களின் முன்னோர்கள் 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து குவாதலூப்புக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

சாமுவேல் முத்துசாமி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொங்கோ தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் 50-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் அவருக்கு உள்ளது.

குறிப்பாக, கொங்கோ அணி கடந்த 1974ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளது. அதோடு உலகக்கோப்பை வரலாற்றில் தனது முதல் கோலையும் பதிவு செய்துள்ளது. இந்த வரலாற்று தருணத்தில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த வீரர் ஒருவரும் களமிறங்கியிருப்பது இரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை பெற்றுள்ளது
 

Leave a comment

Comment