தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய்யை, பிரபல முன்னணி நடிகை சமந்தா ரூத் பிரபு சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக கத்தி, தெறி, மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த சமந்தா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரை அரசியல் தளத்தில் முதலமைச்சராகச் சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதலமைச்சரை சந்தித்த பிறகு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சமந்தா, மிகவும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்: அதில்,
இன்று நான் சென்னைக்கு வந்தபோது, ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை உணர்ந்தேன். ஏனெனில், நான் நமது முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தேன்."விஜய் சார் வெறும் திரையில் தோன்றும் ஹீரோவாக மட்டும் இருக்க வேண்டியவர் அல்ல என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அவரது ஆற்றல், அவரது ஆளுமை மற்றும் மக்கள் அவர் மீது காட்டும் அன்பு ஆகியவை அவர் ஏதோ ஒரு பெரிய இடத்திற்குச் செல்லப் போகிறார் என்பதையே எனக்கு உணர்த்தின."
"தனது துறையில் உச்சத்தை எட்டி, எல்லாவற்றையும் சாதித்த பிறகு, அதை அப்படியே விட்டுவிட்டு சவால்கள் நிறைந்த ஒரு புதிய களத்தில் (அரசியல்) இறங்குவதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அது எளிதானது என்பதால் அல்ல, நம்மால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையால்தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்."
"அவர் மீது ஏற்கனவே நம்பிக்கை வைத்திருப்பவர்களையே விஜய் சார் தனது அர்ப்பணிப்பால் வியப்பில் ஆழ்த்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர் வகிக்கும் பதவியால் அல்ல, அவர் கொண்டுள்ள நல்ல எண்ணத்தால்தான் இது சாத்தியமாகும். அவருக்கு வலிமையும், ஞானமும் கிடைக்க வாழ்த்துகிறேன்." என நெகழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய்யின் "தமிழக வெற்றிக் கழகம்" 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் கடந்த மே 10, 2026 அன்று விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகை சமந்தா தனது தயாரிப்பில் உருவாகியுள்ள 'மா இண்டி பங்காரம்' திரைப்படத்தின் ரிலீஸ் பணிகளில் பிஸியாக இருக்கும் வேளையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. திரையுலகைச் சேர்ந்த பலரும் முதலமைச்சருக்குத் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


