தெல்தெனியவில் பூட்டப்பட்ட கார் ஒன்றிற்குள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது காதலருக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில் பொலிஸார் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய, வெலிகமவைச் சேர்ந்த 33 வயதுடைய பிசியோதெரபிஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் சடலம் ஒன்று இருப்பதாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று (17) பிற்பகல் 2 மணியளவில் தொலைபேசி மூலம் தகவல் அளித்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் பூட்டப்பட்டிருந்த கார் ஒன்றைக் கண்டனர்; அதனை வலுக்கட்டாயமாகத் திறந்து சோதனையிட்டபோது, உள்ளே அந்தப் பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலர், அந்தப் பெண்ணின் உடலை வாகனத்தில் கொண்டு வந்து குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், அப்பெண் ஜூன் 3 முதல் ஜூன் 16 வரை நுவரெலியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
அந்தக்காலகட்டத்தில், சுயநினைவற்ற நிலையில் இருந்த அப்பெண்ணை அவரது காதலர் தூக்கிச் செல்வது போன்ற காட்சிகள் சிசிடிவி (CCTV) பதிவுகளில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தெல்தெனிய பொலிஸாருக்கு இது குறித்த ஆரம்பத் தகவலை வழங்கியவர், அப்பெண்ணின் காதலராகக் கருதப்படும் நபர் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் தற்போது தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரைக் கண்டறிய நுவரெலியா பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிவான் விசாரணையைத் தொடர்ந்து, பிரதே பரிசோதனைக்காக அப்பெண்ணின் உடல் தெல்தெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஒரு கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் நிகழ்ந்ததா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


