TamilsGuide

ஈழத்தின் முதல் தமிழ்ப் பெண் புலவர்..

தமிழி தனது முன்னோடிகளாகக் கருதும் மூவருள் ஒருவரான ஈழத்தின் முதல் தமிழ்ப் பெண் புலவர் என்ற பெருமைக்குரிய தெய்வத்திருமகள் பண்டிதை அன்னை சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரது நினைவுதினம்.
(07.01.1925 - 15.06.2008)

தமிழும் சைவமும் தன் இரு கண்கள் என வாழ்ந்த அன்னை ஆலயங்கள் வெறுமனவே வழிபாட்டுத்தலங்கள் அல்ல அவை சமூகத்தின் உயரிய அறச்சாலைகள் என்ற கருத்தியலை இந்த உலகிற்கு மீண்டும் ஞாபகப்படுத்தினார். ஆதரவற்ற பெண்பிள்ளைகளைத் தத்தெடுத்து கல்வி ஞானத்தை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி அன்னை என்ற தானத்தை அடைந்தார். பெண்கள் பொது வெளியில் பேசவே கூடாது என்று தடைகள் விதிக்கப்பட்ட காலத்தில் ஆண்கள் மட்டும் அலங்கரித்து வந்த பேச்சு மேடைகளில் தனி ஒரு பெண்ணாகத் தோன்றி மாபெரும் ஆளுமையாகத் தன்னை தனித்து அடையாளப்படுத்திக்காட்டினார்.

90 களில் வெளிவந்த மல்லிகை இதழில் அட்டைப்படக் கட்டுரையாக அம்மையாரைப் பற்றி ஒரு கட்டுரை பிரசுரமாகியது. அதில் இருந்து சில வரிகள்

“அம்மையார் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்திற்கு சட்டபூர்வமான தலைவர் ஆனால் ஈழத்தில் உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் அறங்காவல் பணிகளுக்கும் இவரே ஆதர்ச-மானசீகத் தலைவர்.........

சமயம் சம்பந்தமாக எழும் பிரச்சினைகளில் அம்மையாரின் கருத்துக்கள் முக்கிய கவனத்தை பெறும்.அங்கே “ அம்மா என்ன சொல்கிறா ?” என்ற வினா எழும். அதற்கு “அம்மா சொன்னால் சரி” என்ற விடை அம்மையாரின் கருத்துக்குத் தமிழ் மக்கள் கொடுத்த ஏகோபித்த அங்கீகாரம்”

‘யாழ்ப்பாணத்தின் இந்து மதப்பண்பாட்டில் அண்மைக் காலத்தில் இரு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்று, இந்துக்களால் வழிபடப்பெறும் ஒரு பெண் தெய்வத்தின் வழிபாடு பற்றியது.மற்றது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் கோயில் முகாமை பற்றியது. செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி என்ற ஒரு தமிழாசிரியையின் ஆன்ம யாத்திரையினூடாக, அவரது புலமை முதிர்ச்சியின் வழியாக அவரை வழி நடத்தும் சமூக மத தரிசனத்தினூடாக இந்த இரு மாற்றங்களும் நிறைவேறியுள்ளன’ எனப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் கூறிய கூற்று, சிவத்தமிழ்ச்செல்வி, துர்க்காதுரந்தரி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டியின் சான்றாண்மையையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்துவதாகக் காணப்படுகின்றது.

சைவமும் தமிழும் தழைத்தோங்கத் தன்னை அர்ப்பணித்த அன்னை சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாகுட்டி அம்மையார் அவர்களை, அவரது நினைவுதினத்தில் நினைவுகூர்வதில் பெருமை கொள்கிறது தமிழி
 

Leave a comment

Comment