மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா விதித்திருந்த கடுமையான கடல்வழி முற்றுகையை வெற்றிகரமாக முறியடித்து, ஈரானின் முதலாவது கச்சா எண்ணெய் தாங்கி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளன.
சுமார் இரண்டு மாத காலமாக நீடித்து வந்த அமெரிக்கக் கடற்படையின் தீவிர கண்காணிப்பு மற்றும் முற்றுகைகளுக்கு மத்தியிலும், ஈரானிய எண்ணெய் கப்பல்கள் எவ்வித பாதிப்புமின்றி சர்வதேச கடற்பரப்பை நோக்கி நகர்ந்துள்ளதாக சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் தடைகளையும் மீறி ஈரானிய கச்சா எண்ணெய் உலகளாவிய சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நிலவி வந்த கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு கணிசமாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.
ஈரானிய எண்ணெய் சந்தைக்குள் நுழைந்ததன் நேரடி எதிரொலியாக, சர்வதேச சந்தையில் பெஞ்ச்மார்க் ஆகக் கருதப்படும் ‘ப்ரெண்ட்’ கச்சா எண்ணெயின் விலை அதிரடிச் சரிவைச் சந்தித்துள்ளது.
தற்போதைய சர்வதேச வர்த்தக நிலவரங்களின்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 78.40 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது என்று வெளிநாட்டு நிதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் கடுமையான இராஜதந்திரப் போருக்கு மத்தியில், ஈரானின் இந்த அதிரடி நகர்வு சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.


