TamilsGuide

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாகப் பெறக்கூடிய மொபைல் செயலி (App) ஒன்றை இலங்கைப் பொலிஸார் அறிமுகப்படுத்தவுள்ளனர்.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கைப் பொலிஸார்  பல்வேறு சேவைகளை மக்களின் விரல் நுனியில் கொண்டுவரும் நோக்கில், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஒரு சிறப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இத் திட்டம் நிறைவடைந்த பின்னர், IOS மற்றும் Android இயங்குதளங்களுக்குப் பொருந்தக்கூடிய ஒரு மொபைல் செயலி (Mobile App) மற்றும் புதிய பொலிஸ் இணையதளம் பொதுமக்கள் தங்களது மின்னணு சாதனங்கள் (Devices) மூலம் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இம் மொபைல் செயலியின் மூலம், பொலிஸ் ஊடகப் பிரிவு சமூக ஊடகங்கள் வழியாக வெளியிடும் விழிப்புணர்வு தகவல்கள், செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எளிதாகப் பார்வையிட முடியும். மேலும் Notification வசதியின் மூலம் அவசர அறிவிப்புகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

அதேபோல், பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்கள், அவசர தொலைபேசி எண்கள், அவசரகால Location Alert சேவைகள் உள்ளிட்ட பல பொலிஸ் சேவைகளை எளிதில் பெறக்கூடிய வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட உள்ளது.

இச் செயலி மற்றும் இணையதளம், “Vampior Design” என்ற மென்பொருள் அபிவிருத்தி நிறுவனத்தின் உருவாக்கமாகும். இதற்கான தொழில்நுட்ப ஆதரவு மற்றும் நிர்வாகப் பணிகளை இலங்கைப் பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மேற்கொண்டு வருவதுடன், உள்ளடக்கத் தயாரிப்பு பணிகளை பொலிஸ் ஊடகப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் பொலிஸ் சேவைகளைப் பெறுவதற்கும் தகவல்களை அறிந்துகொள்வதற்கும் பொதுமக்கள் செலவிடும் நேரமும் உழைப்பும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எதிர்வரும் காலத்தில் இந்த செயலி ஒவ்வொரு குடிமகனின் நவீன கைப்பேசியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய செயலியாக மாறும் என நம்பப்படுகிறது.

இத் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் கூட்டம் 2026.06.16 அன்று பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அலுவலக தத்துவ பிரதானி பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் டயஸ், ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷானி செனவிரத்ன, பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜீ. லக்சிறி கீதால், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் “Vampior Design” நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசங்க பண்டார உள்ளிட்ட நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a comment

Comment